Published : 11 Sep 2014 12:14 PM
Last Updated : 11 Sep 2014 12:14 PM

கிரானைட் உள்ளிட்ட குவாரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உ.சகாயம் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்தது.

தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

டிராஃபிக் ராமசாமி மனு விவரம்

தங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியைத் தாண்டி தமிழ்நாடு முழுவதும் குவாரி உரிமையாளர்கள் பலர் சட்ட விரோதமான முறையில் கனிம வளங்களை தோண்டி எடுக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்காக வழங்கப்பட்ட பூமிதான நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனியார் பட்டா நிலங்கள் என பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

மதுரை மாவட்ட ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பணியாற்றிய போது அந்த மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அந்த ஒரு மாவட்டத்தில் செயல்படும் குவாரிகளால் மட்டும் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.

ஒரு மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளால் மட்டும் இவ்வளவு பெரிய நஷ்டம் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் ஆற்று மணல், கிரானைட், கருங்கல் ஜல்லிகள் மற்றும் பிற கனிமங்கள் இவ்வாறு குவாரி உரிமையாளர்களால் வெட்டி எடுக்கப்படுகின்றன.

அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துக் செல்லப்படுவதும் வருவாய் துறையினர், காவல் துறையினர் மற்றும் கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடக்கிறது என்பது மிகவும் வியப்பாக உள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்ட விரோத கனிம குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல ஆண்டுகளாக நான் கோரிக்கை விடுத்து வருகிறேன். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகவே, தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சட்ட விரோத கனிம குவாரிகள் பற்றி ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்தை நியமனம் செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி தனது மனுவில் கோரியிருந்தார்.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள கனிம குவாரிகளின் செயல்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்தை சட்ட ஆணையராக நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் சட்ட விரோதமான முறையில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாய நிலங்களில் கூட இவ்வாறு குவாரிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடரபாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் ஏற்கெனவே ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். ஆகவே, இந்த விவகாரம் பற்றி ஆராய அவரை சட்ட ஆணையராக நியமிப்பதே பொருத்தமானது என நாங்கள் கருதுகிறோம்.

அவர் கனிம குவாரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, குவாரிகளின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையை 2 மாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவருக்குத் தேவையான உதவிகளை காவல் துறையினரும், அதிகாரிகளும் வழங்கிட வேண்டும்" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x