Published : 09 May 2019 02:37 PM
Last Updated : 09 May 2019 02:37 PM

நான் திமுகவில் இணையப் போகிறேனா?- தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

தான் திமுகவில் இணையப் போவதாக, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ள கருத்துக்கு தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று (வியாழக்கிழமை) திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

நீங்கள் திமுகவில் இணையப் போவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறாரே?

யாராக இருந்தாலும், கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். முட்டாள்தனமாக பேசக்கூடாது. ஜானகி அணி - ஜெயலலிதா அணி இருந்தபோது, ஏன் ஜானகி ஆட்சியை திமுகவுடன் சேர்ந்து கலைத்தார்கள்? அதுவும் எம்ஜிஆர் ஆட்சிதானே. மேதாவி போன்று பேசுகிறார். மேதாவிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.

திமுகவில் இணைவதாக இருந்தால் தேர்தலுக்கு முன்பு சேர்ந்திருக்க வேண்டும் அல்லது தேர்தலுக்குப் பின்பு சேர வேண்டும். இப்படி இடைப்பட்ட காலத்தில் யாராவது சேருவார்களா? இந்தக் கருத்தை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்?

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அமமுக தான் ஜெயிக்கும். அதன்பிறகு முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும். முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளுநரிடம் கொடுக்க வேண்டும். அப்போது, அமமுக எம்எல்ஏக்கள் இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று தான் வாக்களிப்போம். திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் எப்படி வாக்களிக்கும் என்பதை அவர்களிடம் கேட்க வேண்டும்.

தேனியில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளதே?

2 வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 3,000 ஓட்டுகள் இருக்கும். ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் கூட கொடுக்க அதிமுக தயாராக இருக்கிறது. பணத்தை வைத்துக்கொண்டு யாருக்குக் கொடுக்கலாம் என காத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை மறுதேர்தல் தேவையில்லை.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x