

தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே கோயில் கல்வெட்டில் ஓபிஎஸ் மகனை 'எம்.பி.'யாக்கிய முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சின்னமனூர் குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலுக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயம் உள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 16-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக வைக்கப்பட்ட கல்வெட்டில் அதிமுக தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை 'நாடாளுமன்ற உறுப்பினர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கையே முடிவடையாத நிலையில் எம்.பி. என்று தெரிவிக்கப்பட்டிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுப்பப்பட்ட து. தேர்தல் ஆணையத்திடமும் பல்வேறு கட்சிகள் புகார் அளித்தன.
இதனைத் தொடர்ந்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கோயில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான வேல்முருகன் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேல்முருகன் காவல்துறையில் பணிபுரிந்த போது பல்வேறு சாகச நிகழ்ச்சிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார். உயரமான இடத்தில் இருந்து குறைவான நீரில் குதிப்பது, காரை இழுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அதேபோல் ஜெயலலிதா இறந்த போது காவலர் சீருடையில் மொட்டையடித்துக் கொண்டது, மெரினா பீச்சில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது என்று இவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் உண்டு.
ஒருகட்டத்தில் இவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கல்வெட்டு அமைத்ததின் மூலம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இவர் மீது 468, 470, 468 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்.பி. பாஸ்கரன் கூறுகையில், "தேர்தல் நன்னடத்தை நடைமுறையில் இருக்கும் போது விதிமுறைகளை மீறி தவறான தகவல்களைப் பொது இடங்களில் பரப்புதல் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து அதிமுக தரப்பில் முதன்மை முகவர் சந்திரசேகரும் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.