

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில்,வாக்குப்பதிவு அன்று நடைபெற்ற வன்முறை காரணமாக 275 வாக்காளர்கள் வாக்களிக்காததால் பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று விஷ்ணுராஜ் என்பவர், கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
விஷ்ணுராஜ் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் முறையிட்டார். இன்று (புதன்கிழமை) அவரது முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை தேர்தல் வழக்கு மூலமாக அணுக அறிவுறுத்தினர்.