

திண்டிவனம் அருகே பேராசிரியர் கல்யாணி உட்பட 2 பேரை திடீரென கைது செய்த போலீஸார் பின்னர் பிணையில் விடுவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மோகன் (41). இவரும், இவர் மனைவி ரோஜாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 11-ம் தேதி மோகன் தன் மகள் சுபாஷினியோடு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் கடந்த 13-ம் தேதி மோகனைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மோகனின் மனைவி ரோஜா மயிலம் போலீஸில் தன் கணவர் மோகன் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் நேற்று முன்தினம் மோகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு போலீஸார் தாக்கியதாகவும், அதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணிக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) பேராசிரியர் கல்யாணி மற்றும் வழக்கறிஞர் முருகப்பன் ஆகியோர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த விவரங்களை மனுவாக எழுதி ஆட்சியர், திண்டிவனம் டிஎஸ்பி மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஎஸ்பிக்கு புகார் அனுப்புவதாக மோகனிடம் கூறிவிட்டு வெளியே வந்தனர்.
அங்கு வந்த மயிலம் போலீஸார் மோகனின் மனைவி ரோஜா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் கல்யாணி மற்றும் வழக்கறிஞர் முருகப்பனைக் கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர்.