Published : 06 May 2019 02:43 PM
Last Updated : 06 May 2019 02:43 PM

3 எம்எல்ஏக்களுக்கு எதிராக பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை: வைகோ வரவேற்பு

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேருக்கு பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயகத்தின் வெற்றி என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசியலில் ஆட்சியைப் பறிகொடுத்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதற்காக பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை தவறானது. அதற்குத் தடை வேண்டும் என்று உச்ச நீதின்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதை ஜனநாயகத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன். ஏற்கெனவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான தாக்கீது கொடுக்கப்பட்டுவிட்டால், அதற்கு பிறகு பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

அந்த அடிப்படையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் எடுத்த முயற்சியால், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தாக்கீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களை நீக்குவதற்காக எடுக்கின்ற முயற்சி தோற்றுப்போகும் என்பதைத்தான் சட்ட வல்லுநர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், தீர்ப்பு வந்திருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவர் தான் எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, பேரவையில் எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கிற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவர் சந்திப்பதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும்" என, வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x