

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த போலீஸார் பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி அடுத்த காளியாபுரம் அருகே உள்ள நரிகல்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன், கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தேவி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தேவிக்கு கடந்த 29-ம் தேதி சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேவியின் குழந்தையை, அவருடன் தங்கியிருந்த அடையாளம் தெரியாத பெண் கடத்திச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீஸார் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தையை திருடிச் சென்றது, உடுமலை குறிச்சிகோட்டையை சேர்ந்த லிங்கசாமி என்பவரது மனைவி மாரியம்மாள் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீஸார் மாரியம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.