Published : 10 Sep 2014 10:01 AM
Last Updated : 10 Sep 2014 10:01 AM

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் தகனம்

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம், கல்லரைப்பட்டி நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தயாநிதி (30). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தயாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். அவரைப் பரிசோதித்த ராணுவ மருத்துவக்குழுவினர் தயாநிதிக்கு வைரஸ் காய்ச்சல் தாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

இருப்பினும் அவருக்கு ராணுவ முகாமில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், சிகிச்சை பலன் இல்லாமல், தயாநிதி ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை காஷ்மீர் ராணுவ முகாமில் உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு ராணுவத்துறை தகவல் அனுப்பியது. இந்நிலையில், வைரஸ் காய்ச்சலில் உயிரிழந்த தயாநிதி உடல் விமானம் மூலம் சென்னைக்கு 9-ம் தேதி அதிகாலை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தனி வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான கல்லரைப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், மறைந்த ராணுவ வீரர் தயாநிதி உடலுக்கு ராணுவ அதிகாரிகள், வாணியம்பாடி வட்டாட்சியர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா, ஊர் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை அதேபகுதியில் உள்ள இடுகாட்டில் தயாநிதி உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x