Last Updated : 29 May, 2019 12:00 AM

 

Published : 29 May 2019 12:00 AM
Last Updated : 29 May 2019 12:00 AM

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா?- அதிமுக, பாஜக, பாமக கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் முகாம்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ள நிலையில், அமைச்சரவையில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் அதிமுக, பாஜக, பாமக கட்சிகளின் தமிழக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்தவொரு தொகுதியிலும் பாஜக வெற்றி பெறவில்லை. ஆனால், தமிழகத்தில் பாஜகவை வலுவாக காலூன்ற செய்யும் நடவடிக்கைகளில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக முக்கிய நிர்வாகி ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி, அவரை மத்திய அமைச்சராக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதால் தமிழகத்தில் இருந்து, மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.

அதிமுகவில் போட்டி

இவர்களைப்போல் அதிமுகவில் இருந்து தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். இணையமைச்சர் பொறுப்பை பெற்றுவிட வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பு முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கும்பட்சத்தில் அப்பதவியை பெறுவதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கமும் களத்தில் இறங்கியிருக்கிறார். அவருக்கு அமைச்சர் பொறுப்பை ஒதுக்குமாறு துணை முதல்வரின் எதிர்தரப்பினர் பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

பாமக தரப்பு

மாநிலங்களவையில் ஒரு இடத்தை பாமகவுக்கு ஒதுக்க, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது உடன்பாடுசெய்யப்பட்டிருப்பதால், பாமகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் அமைச்சரவையில் அங்கம் வகிக்க பாமக தரப்பில் இருந்தும் காய்கள்நகர்த்தப்படுகின்றன. இதற்காகவேஅன்புமணி தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் தங்கியுள்ளார்.

கட்சிக்கு புதிய தலைவர்

தமிழக பாஜக முக்கிய நிர்வாகிஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் இருந்து பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டிருந்தாலும், யாருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறுதியிட்டு சொல்வதற்கில்லை.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் மத்திய அமைச்சரவை உத்தேசப் பட்டியலில் உண்மை ஏதுமில்லை. மத்திய அமைச்சரவையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இடம்பெறும்பட்சத்தில் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேநேரத்தில் தமிழகத்திலும் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு புதியவர் நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அப்பொறுப்பை பெறுவதற்காகவும் சிலர் டெல்லியில் முகாமிட்டிருக்கக் கூடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x