

சாதிக் பாட்சா, அண்ணா நகர் ரமேஷ் உள்ளிட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் புகார் வரப்பெற்றால் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரித்துப் பேசியதாவது :
“ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மோகன் எளிமையானவர். திறமையானவர். ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் 2016-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தற்போது கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு ஒரு சிலரின் பேராசைக்கு இணங்கி தங்களது சுய லாபத்திற்காக சேராத இடம் சேர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி செய்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது டிடிவி தினகரன் எங்கே இருந்தார்?
அவர் கட்சியிலே உறுப்பினராகக் கூட இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதிமுக ஆட்சியில் மக்களுக்காக செய்யப்பட்ட சாதனைகளை சொல்லியும் இனி செய்யப்போகும் திட்டங்களை பட்டியலிட்டும் உங்களிடத்திலே வாக்கு கேட்டு வருகிறோம்.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், அவர்களது ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட எந்த சாதனைகளையும் சொல்லாமல் அரசின் மீது குறைகளை மட்டுமே சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். ஏனென்றால் அவரது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான எந்த ஒரு நலத்திட்டத்தையும் அவர் செயல்படுத்தியதில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மீது தவறான குற்றச்சாட்டை கூறிவிட்டுச் சென்று இருக்கிறார். அதை தெளிவுபடுத்துவது எனது கடமை.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அதிமுக பிரமுகர் ஒருவர் போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் கொடுமையில் ஈடுபடுவதாக கடந்த மாதம் 21-ம் தேதி வழக்கறிஞர் அருள் என்பவர் காவல்துறையில் ஒரு ஆடியோ பதிவுடன் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இந்தப் புகாரில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான செய்தியைப் பரப்பி வரும் வக்கீல் அருளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட வக்கீல் சங்கத்தினர் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் தந்ததின் பேரில் 30-ம் தேதி வழக்கறிஞர் அருள் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது ஏற்கெனவே 9 வழக்குகள் பதியப்பட்டு விசாரணையில் உள்ளது. அப்படிப்பட்டவர் தான் இன்றைக்கு இந்தப் புகாரை அளித்திருக்கிறார். தவறான தகவலை ஒருவர் மீது பரப்பி, அவரை மிரட்டி அதன் மூலம் பணம் பறிப்பது தான் அவரது வேலை. வழக்கறிஞர் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடன் பேசியதாக பரப்பிய ஆடியோவானது அவரது அலுவலகத்திலேயே பணிபுரியும் கலையரசி என்ற உதவியாளரின் தோழியை வைத்துப் பேசி பதியவைத்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலையரசியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது கூட தெரியாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டும் என்றே ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மீது பாலியல் வழக்கில் சம்பந்தப்படுத்தி பேசுவது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகிறது. பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மீது களங்கம் கற்பித்து பழி சுமத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டினை ஸ்டாலின் கூறி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் என்பவர், அவரது வீட்டில் பணிபுரிந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமா, ஆ.ராசாவுக்கு மிக நெருக்கமான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக் பாட்சா என்பவர் ரியல் எஸ்டேட் அதிபர் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் மூலம் சம்பாதித்த கோடிக் கணக்கான பணத்தை சாதிக் பாட்சா கம்பெனியில் முதலீடு செய்திருந்தார்.
அவர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அன்றைய திமுக அரசால் அந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதே போன்று அண்ணா நகர் ரமேஷ் என்பவரும் ஸ்டாலினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அவரும் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்று சொல்லி வழக்கை முடித்து விடுகிறார்கள்.அவை குறித்த புகார் அரசுக்கு வரப்பெற்றால் உரிய விசாரணை நடத்தப்படும்.
சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த பால்மலர் என்பவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார். அந்தச் சம்பவத்தில் திமுக பிரமுகர்கள் ஈடுபட்டதாக செய்திகள் வரப்பெற்றுள்ளன. அது குறித்த புகார் வரப்பெற்றால் அதன்மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.