

எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 74.
அவருடைய மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலியில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் பிறந்த இவர் தமிழ் மொழியில் குறிப்பிடத்தக்க படைப்புகளை படைத்துள்ளார். தமிழ் மொழியின் குறிப்பிடத்தக்க இலக்கியங்களை மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி இலக்கியங்களுக்கும் தோப்பில் முஹம்மது மீரான் தமது செம்மையான படைப்புகளின் மூலம் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.
எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானுடன் எனக்கு நேரடியான அறிமுகமோ, பழக்கமோ இல்லை என்றாலும் கூட, அவரது தமிழ் படைப்புகள் பலவற்றை நான் படித்து ரசித்திருக்கிறேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற சாய்வு நாற்காலி நாவல் முகமது மீரானின் இலக்கியத் திறமைக்கு சான்றாகும்.
எழுத்தாளர் முஹம்மது மீரானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.