Published : 07 May 2019 12:30 PM
Last Updated : 07 May 2019 12:30 PM

முதுமையைக் காரணம் காட்டி தந்தையைப் பராமரிக்காமல் ஆதரவற்றவராக்கிய மகன்கள்: திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை புகார்

முதுமையைக் காரணம் காட்டி, பெற்ற தந்தையை பராமரிக்காமல் ஆதரவற்றவராக்கிய மகன்கள் குறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தந்தை புகார் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவருக்கு மேனகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தன்னிடம் இருந்த சொத்துகளை மூன்று மகன்களுக்கும் கோவிந்தராஜ் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

அதன் பின்னர், இவரது மகன்கள் மூன்று பேரும் கோவிந்தராஜைக் கைவிட்டதாகத் தெரிகிறது. இவரது மனைவி மேனகாவை மட்டும் இரண்டாவது மகன் தனது பராமரிப்பில் வைத்துள்ளார். தந்தை கோவிந்தராஜை வைத்துப் பராமரிக்க மூன்று மகன்களும் முன்வராத நிலையில், விரக்தியடைந்த கோவிந்தராஜ் திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகிறார்.

பார்ப்பவர்களிடம் உணவு கேட்டு, தனது வயிற்றுப் பசியைப் போக்கி, கிடைத்த இடங்களில் படுத்து உறங்கி வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு  அளித்துள்ளார். அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று விசாரிப்பதற்காக நேற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

அவரது நிலையை அறிந்த அலுவலர்களும், புகார் அளிக்க வந்த பொதுமக்களும் அவரது நிலையைக் கேட்டு அனுதாபம் தெரிவித்துச் சென்றனர். இதனிடையே இவரது நிலை குறித்து அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், உடனடியாக முதியவரை தனது அறைக்கு அழைத்து வருவதற்கு இரண்டு ஊழியர்களை அனுப்பினார்.

அவர்கள் அலுவலகத்தின் கீழ் தளத்தில் இருந்த கோவிந்தராஜை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு அவரிடம்  நடவடிக்கை எடுப்பதாகக் கூறி கனிவோடு உபசரித்து முதியவரை அனுப்பி வைத்தார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x