

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான அறிவிப்பாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கி.மீ. தொலைவுக்கு 8 வழிகள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க கடந்த ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. நில அளவீடு பணிகள் நடந்தபோது, அதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டங்களை நடத்தினர்.
இதற்கிடையே, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலஆர்ஜிதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்பதால் இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும் காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், தருமபுரி தொகுதி எம்பி என்ற முறையில் அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், "சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பொதுமக்களிடமும் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
எனவே, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவசரகதியில் வெளியிடப்பட்ட இத்திட்டத்துக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. இத்திட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலஆர்ஜித நடைமுறையும் செல்லாது என்பதால் அதை வகைமாற்றம் செய்து, மீண்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கே சொந்தம் என அறிவிக்க வேண்டும். இந்த உத்தரவை 8 வாரங்களுக்குள் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று (மே 31) சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் திங்கள்கிழமை (ஜூன் 3) அன்று விசாரிக்க உள்ளது.