Published : 31 May 2019 04:19 PM
Last Updated : 31 May 2019 04:19 PM

10% இடஒதுக்கீடு தொடர்பான மகாராஷ்டிர அரசின் ஆணை ரத்து: கி.வீரமணி வரவேற்பு

10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மகாராஷ்டிர அரசின் ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது வரவேற்கத்தக்கது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய சாதியினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு தருகின்ற வகையில் 103-வது அரசியல் சட்டத்தை முந்தைய மோடி அரசு - அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததாக - ஓரிரு நாட்களில், அவைகள்  முடியும் நாளில் நிறைவேற்றியது.

திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தன

திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை எதிர்த்தன. மாநிலங்களவையின் திமுக தலைவராக இருந்த கனிமொழி "இது நாடாளுமன்ற நிலைக் குழு விவாதத்திற்கு அனுப்பப்பட வேண்டும்" என்ற ஒரு சரியான தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது - தவறான புரிதலின் காரணமாகவே - வட மாநிலங்களில் தங்களது வாக்கு வங்கி இதனால் பாதிக்கப்படுமே என்ற அச்சத்தின் காரணமாகவோ, காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து எதிர்த்து வாக்களித்தன. அத்தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை.

நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது

விளைவு - 10 சதவீத இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படை என்ற முறையில், அரசியல் சட்ட கர்த்தாக்களின் எண்ணங்களுக்கு நேர் விரோதமான முறையிலும், பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமாகவும் நிறைவேறியதோடு, வேறு எதிலும் காட்டாத அவசரம், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நியமனங்கள், கூடுதல் சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் எல்லாம் நடந்தேறின!

இச்சட்டத் திருத்தம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மற்றும் பல சமுக நீதி அமைப்புகள் எல்லாம் வழக்குத் தொடுத்து ஏற்கப்பட்டு ஆணையாக நோட்டீஸ் விடப்பட்டது மத்திய அரசுக்கு.

உச்ச நீதிமன்றத்திலும் சமுக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பும், மற்ற பிற அமைப்புகளும் அரசியல் சட்டத் திருத்தத்தினை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, அதனை அரசியல் சாசன அமர்வுகள் விசாரிக்கவிருக்கும் நிலையும் உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது

மும்பையில் மகாராஷ்டிர பாஜக அரசு மருத்துவ இடங்களுக்கு 10 சதவீத  ஒதுக்கீடு என்று மற்ற இடங்களிலிருந்து எடுத்துக் கொடுக்கும் வண்ணம் ஆணையிட்டதை எதிர்த்து, மும்பை மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நேற்று தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு அமர்வு, இந்த ஆணையை நிறுத்தியதோடு, ஏற்கெனவே அறிவிக்கப்படாமல், முந்தைய தேர்வு மற்றவைகள் நடந்தபிறகு இதனை செயல்படுத்த முயற்சிப்பது சட்டப்படி தவறு;  பொதுத் தொகுதியில் உள்ள இடங்களில் எடுத்துக் கொடுப்பது சட்டப்படி சரியல்ல; கூடுதல் இடங்கள் தந்தால் ஒழிய இதனை அமுல்படுத்த முடியாது என்று கூறி நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது!

நீதிமன்றங்களில் இந்தத் திருத்தம் அடிபட்டுப் போகும்!

எதிர்காலத்தில் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டின் கதி செல்லாது என்றுதான் தீர்ப்புகள் வர வாய்ப்பு; அரசியல் சட்ட அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தங்களைக் கொணர்ந்தால் அவை செல்லுபடியாகாது என்றே கூறும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டினை மோடி அரசு அவசர அவசரமாக செயல்படுத்தி கல்வியிலும், பணியிலும் செய்யத் துடிக்கிறது. இதில் எழும் சட்டப் பிரச்சினை மிகவும் சிக்கலாகும் வருங்காலத்தில் என்பது உறுதி!

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்கள் இதனைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அதனைப் போட்டவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வருமானால், செய்யப்பட்ட சேர்க்கைகள் நிரப்பப்பட்ட இடங்களில் அமர்ந்தோரின் கதி - நிலை என்னவாகும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி அல்லவா?

மண்டையில் ஓங்கிக் குட்டியது நீதிமன்றம்

பொதுப்பிரிவில் உள்ள இடங்கள் "திறமை" அடிப்படையிலான போட்டிக்கான இடங்கள் என்ற வகையில், இடஒதுக்கீடு அமைந்துள்ளதால், அதில் உள்ள இடங்களிலிருந்து 10 சதவீதத்தை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பதை எப்படி சட்டப்படி ஏற்க முடியும்? மத்திய அரசின், இதை அமலாக்க அவசரம் காட்டும் மாநில அரசுகளின் மண்டையில் ஓங்கி அடித்தாற் போலக் கேள்வி கேட்டிருப்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய முக்கிய கேள்வியாகும்.

இந்த நிலைப்பாட்டையெல்லாம் புறந்தள்ளி, மத்திய அரசு நடந்து கொள்ளுவது எவ்வகையில் நியாயம்?

தமிழ்நாடு அரசின் இரட்டை வேடம்
தமிழ்நாடு அரசு, உண்மையாக மத்திய அரசின் பொருளாதார இடஒதுக்கீட்டினைக் கடுமையாக எதிர்த்திட வேண்டாமா? எதிலும் இரட்டை வேடம் எவ்வளவு காலத்திற்கு", என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x