

கமல்ஹாசனுக்கு எதிராக தமிழகம் முழுதும் புகார் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அனைத்து மக்களவைத் தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தினார். 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
அரசியல் களத்தில் கமல்ஹாசன் குதித்த பின்னர் அவரை பாஜகவினரும், அதிமுகவினரும் குறிப்பாக அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கமல்ஹாசனுக்கு நகர்ப்புற இளம் வாக்காளர்களை ஈர்த்துள்ளார் என்றும், வெற்றி பெறமாட்டார் என்றாலும் சேதாரத்தை ஏற்படுத்தி பிற கட்சிகளின் வெற்றியைத் தடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. உளவுத்துறை அறிக்கையும் கமல் மீதான கவன ஈர்ப்பை உறுதிப்படுத்தியதாகத் தகவல் கசிந்தது.
இதனால் கமல் மீதான விமர்சனம் கடுமையாக வைக்கப்படுகிறது. அதேநேரம் கமல்ஹாசன் பேச்சு வரைமுறை தாண்டாமல் இருந்தாலும் சில இடங்களில் அவரது விமர்சனம் எதிர்க்கட்சிகளை ஆவேசப்படுத்துகிறது.
இதில் ஒரு விமர்சனம்தான் அரவக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து கமல் பேசிய பேச்சு. ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன் அதற்கு நியாயம் கேட்க வந்திருக்கிறேன்” என்ற கமல்ஹாசனின் பேச்சால் சர்ச்சை எழுந்தது. இந்துக்களை விமர்சித்தார் என எதிர் தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் தி.க., காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் பேசியது சரிதான் என தெரிவித்துள்ளன. இந்து அமைப்புகளைவிட அதிகமாக கோபப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசன் நாக்கு அறுக்கப்படும் என பேசி புது சர்ச்சையை உருவாக்கினார்.
கமலை கைது செய்யவேண்டும் என ஒருசாரர் குரல் எழுப்பினர், கமல்மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல்மீது தமிழகத்தில் கரூர் வடக்கு, மடிப்பாக்கம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கரூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன் புகாரின்பேரில் கமல்மீது பிரிவு 153(A) (பேச்சாலோ, எழுத்தாலோ மத, இன, மொழி, சாதி , சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது) 295(A) (மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படுவது) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.