Published : 29 May 2019 04:19 PM
Last Updated : 29 May 2019 04:19 PM

4001 ஆசிரியர் பதவி உயர்வு: போராட்டம் நடத்தியவர்களுக்கு மறுப்பு- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 4001 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மாநிலம் முழுவதும் பணியாற்றும் 4,001 பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறவுள்ளனர். பதவி உயர்வு வழங்கப்படும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.

தற்காலிகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கை பதவி உயர்வு அளிக்க வேண்டிய பட்டியலை விட அதிகமாக உள்ளதால், அதை ஆசிரியர்களிடம் காண்பித்து அதில் பெயர் சேர்க்கை, திருத்தம் இருந்தால் சரிசெய்ய வேண்டும்.

அதேபோல் கல்வித் தகுதியில்லாத ஆசிரியர்கள் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்தால் அதை நீக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரிசெய்து வரையறுக்கப்பட்ட பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் ஐந்தாண்டுகள் தொடர்ந்து முதுகலை ஆசிரியராக பணியாற்ற வேண்டும். 

மேலும் கடந்த காலங்களில் பதவி உயர்வுக்கு தகுதி இருந்தும் அவர்கள் பெயர் பல்வேறு காரணங்களால் பதவி உயர்வு பெயர் பட்டியலுக்கு பரிந்துரைக்காமல் மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராமல் இருக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி இருந்தும் முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்காத சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் இளங்கலை பாடத்தில் இரட்டைப் பட்டப்படிப்பு படித்தவர்களின் (double degree) பெயர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒழுங்கு நடவடிக்கையின்கீழ் வரும் ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை என்பது அரசு ஊழியர்கள் மீது பிரிவு 17(பி)-ன் கீழ் எடுக்கப்படும். போராட்டங்களில் கலந்துக்கொண்டு கைதானோர் மீது இப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அது விலக்கிக்கொள்ளப்படும்வரை பதவி உயர்வு கிடைக்காது.

அதன்படி பார்த்தால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பு நடத்திய தொடர்போராட்டத்தில் கலந்து கொண்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை, விதி 17-பி இன்  கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு  நிலுவையில் உள்ளது.

எனவே அவர்களுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது. அதை மீறி தவறாக அவர்கள் பெயரை பரிந்துரைத்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்மீது நடவடிக்கை வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x