Published : 06 May 2019 01:50 PM
Last Updated : 06 May 2019 01:50 PM

சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை: 3 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

3 அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சி விரோதச் செயலில் ஈடுபட்டதாக கடந்த வாரம் கொறடா ராஜேந்திரனால் சட்டப்பேரவை தலைவரிடம் புகார் அளிக்கப்பட, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பினார்.

தனபால் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததால் அவர் செயலற்றவராகிறார். அவர் 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பது  எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.

இந்நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி தங்கள் மீது அதிகாரமில்லாத சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கவேண்டும் என ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு சார்பில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுமுன் முறையீடு செய்யப்பட்டது.

3 எம்எல்ஏக்கள் சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீட்டை செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற அமர்வு வழக்கை மே.6 (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தில், “இதே போன்றதொரு வழக்கில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வர் நபம் துகி வழக்கில் அவருக்கு பெரும்பான்மை இல்லை என ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்த வழக்கில்  உச்ச நீதிமன்றத்தில் நபம் துகி  தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி  கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அருணாச்சலப் பிரதேசத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது செல்லாது என தீர்ப்பு அளித்தது.

அதில் சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் அளிக்கப்பட்ட நிலையில் எந்த உத்தரவும் சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 3 எம்எல்ஏக்கள் மீது தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டப்பேரவைத் தலைவர் மீது கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கிற அடிப்படையில் அவரது நோட்டீஸுக்குத் தடை விதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

சட்டப்பேரவைத்தலைவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தில், “ இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் முறையிட்டிருக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் வரையறையில் இந்த வழக்கு வராது. ஆகவே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்” என வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுசட்டப்பேரவைத் தலைவர் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இது குறித்து சட்டப்பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்தது.

பின்னணி:

சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவின் பலம் சட்டப்பேரவைத் தலைவரையும் சேர்த்து 114 ஆக உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களில் விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி  பிரபு ஆகியோர் அதிமுகவில் இருந்தாலும் தனி அணியாக இயங்கி வந்தனர்.

இவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் மனு அளிக்க, அதை ஏற்று அவர்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுத்தால் சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என திமுக எச்சரித்தது. பிறகு,  திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.

சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததால் அவர் செயலற்றவராகிறார். அவர் 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.

இந்நிலையில் அதை ஏற்று உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x