Published : 25 May 2019 12:12 PM
Last Updated : 25 May 2019 12:12 PM

5 சதவீத வாக்குகள்; தினகரனின் பலம் ஏன் எடுபடவில்லை?

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் சுமுகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  திமுக கூட்டணி 38 இடங்களையும் அதிமுக கூட்டணி ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

இவை இரண்டுக்கும் அடுத்தபடியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் 39 தொகுதிகளில் 21 தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் அவற்றில் தினகரனின் அமமுக வேட்பாளர்கள் பெரும்பாலும் ஒற்றை இலக்க சதவீதத்திலேயே வாக்கு வங்கியைக் கைப்பற்றியுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகளில் மட்டும் அமமுக முறையே 13.3, 11.3, 12.28, 10.01 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

மொத்தத்தில் மக்களவைத் தேர்தலில் அமமுக 5.16% வாக்குகளைப் பெற்றுள்ளது.  அரக்கோணம், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருச்சி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 21 தொகுதிகளில் அமமுக 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மக்களவைத் தொகுதிகளில் சில தொகுதிகளை நிச்சயம் கைப்பற்றுவார், அதிமுகவுக்குக் கடும் சவாலாக அமைவார், எஸ்டிபிஐயுடன் கைகோத்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவில் இருந்து பிரிந்து அமமுக வசம் செல்லும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.

தினகரனின் வசீகரத் தலைமை, அதிருப்தி அதிமுகவினரின் ஆதரவு மற்றும் அதிமுக தலைமை மீதான வெறுப்பு ஆகியவற்றால், அமமுக கணிசமான எம்.பி தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டது. ஊடக கருத்துக் கணிப்புகளும் அதை உறுதிப்படுத்தியதால் உற்சாகமாக வலம் வந்தார் தினகரன். ஆனால் யதார்த்தம் அப்படி அமையவில்லை.

தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள்

அதிமுக உடைந்தபோது, கட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருந்த தினகரன். அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்யாமல் இருந்தார். நீதிமன்றம் மூலம் இரட்டை இலை தனக்குக் கிடைக்கும் என்று அவர் நம்பியது நடக்கவில்லை. ஆர்.கே.நகரில் பிரபலப்படுத்திய தொப்பி சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டார், கிடைக்கவில்லை. அதே தொகுதியில் போட்டியிட்ட குக்கர் சின்னத்தையாவது தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கும் ஆணையம் செவிசாய்க்கவில்லை. கட்சியைப் பதிவு செய்யாததால் சுயேட்சையாக மட்டுமே கருதி, வெவ்வேறு சின்னங்களையே ஒதுக்க முடியும் என்று ஆணையம் கறாராகக் கூறிய நிலையில், உச்ச நீதிமன்றம் சென்றார் தினகரன்.

அங்கு பொதுச் சின்னம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் குக்கரையோ, தொப்பியையோ ஒதுக்காமல், புதிதாக பரிசுப்பெட்டியை ஒதுக்கியது. அதுமட்டுமல்லாமல் அமமுக வேட்பாளர்களின் பெயரிலேயே ஏராளமான சுயேட்சைகள் களமிறங்கினர்.

இந்நிலையில் அமமுக பெற்ற வாக்கு சதவீதம் குறித்தும் தினகரனின் பலம் குறித்தும் மூத்த அரசியல் ஆய்வாளர் ஆழி செந்தில்நாதனிடம் பேசினேன்.

''அதிமுகவில் இருந்து பிரிந்த ஆரம்பத்தில் இருந்தே டிடிவி தினகரன், கட்சித் தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம், கட்சி நிர்வாகிகள் மட்டுமே ஈபிஎஸ்- ஓபிஎஸ் வசம் என்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார். இதைத் தொடர்ந்து தினகரன் அமமுகவை ஆரம்பித்த பிறகு கூடிய கூட்டத்தைப் பார்த்தபிறகு அவர் கூறியது உண்மைதான் என்ற தோற்றம் உருவானது.

முக்குலத்தோர் வாக்கு வங்கி

அதிமுகவைக் கைப்பற்றுவதை மட்டுமே டிடிவி தினகரன் நோக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய உண்மையான பலம் என்ன என்பதை அவர்  கடைசிவர உறுதிப்படுத்தவில்லை. அதிமுக வாக்குகள் மட்டுமல்லாது முக்குலத்தோரின் வாக்குகளையும் அவர் கணிசமாகப் பிரிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளின் மூலம் அது பொய்த்துப் போய்விட்டது. தேனியில் மட்டுமே அதிகபட்சமாக தங்க தமிழ்ச் செல்வன் 12.28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பணத்தை நம்பியது எடுபடவில்லை

இடைத்தேர்தலில் மட்டுமே, பணம் முக்கியக் காரணியாக செயல்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பணத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

தினகரனுக்கு ஆர்.கே.நகர் தேர்தலில் கிடைத்த வெற்றி மற்றும் தமிழகமெங்கும் அவருக்குக் கூடிய கூட்டம் ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையைத் தவறாகக் கணித்துவிட்டார்.

மோடி எதிர்ப்பலை

நாடு முழுக்க மோடி அலை ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் மோடி எதிர்ப்பலை உருவானது. வாக்குகளைப் பிரித்து வீணாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த சிறுபான்மையினர், திமுக கூட்டணிக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். தினகரன் கூட்டணி வைத்திருந்த எஸ்டிபிஐ, சக முஸ்லிம் அமைப்புகளுடனே முரண்பாடுடன் இருந்தது. அவர்களின் வாக்குகளும் திமுக கூட்டணிக்கே சென்றது'' என்றார் ஆழி செந்தில்நாதன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x