Last Updated : 04 May, 2019 12:00 AM

 

Published : 04 May 2019 12:00 AM
Last Updated : 04 May 2019 12:00 AM

திருவண்ணாமலை மாவட்ட இளைஞரின் சமூக சேவை; ஆதரவின்றி இறந்த 800 பேருக்கு இறுதிச்சடங்கு, நல்லடக்கம்: மத்திய, மாநில அரசுகளின் விருதுகள்; 4 டாக்டர் பட்டங்கள்

ஆதரவின்றி உயிரிழப்பவர்களின் உடல்களைப் பெற்று இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி நல்லடக்கம் செய்யும் பணியை கடந்த பல ஆண்டுகளாக செய்துவருகிறார் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மணிமாறன். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன்- ராஜேஸ்வரி தம்பதியின் மகன் மணிமாறன் (32). இவர், துணிகளை மொத்தமாக வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார். ஆதரவின்றி உயிரிழப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்து, அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும் நல்ல காரியத்தை இவர் செய்து வருகிறார்.

கடந்த 16 ஆண்டுகளாக நாடுமுழுவதும் 800-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத, ஆதரவற்றஉடல்களை அரசு மருத்துவமனைகளில் பெற்று அவரவர் மதப்படி நல்லடக்கம் செய்து இறுதிச் சடங்குகளை இவர் செய்துள்ளார்.

இந்நிலையில், யாரும் உரிமை கோராததால் 3 பெண், ஒரு ஆண்என 4 பேரின் சடலங்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வேலூர்அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து,நேற்று முன்தினம் வேலூருக்கு வந்தார் மணிமாறன். மருத்துவமனைக்கு சென்று உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து, பிணவறையில் இருந்து 4 உடல்களையும் முறைப்படி பெற்றுக்கொண்டார். தனி வாகனம் மூலம் உடல்களை வேலூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள மயானப் பகுதிக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை முடித்து, நல்லடக்கம் செய்தார்.

இதுகுறித்து மணிமாறன் கூறியதாவது:உலகில் எல்லோரும் உறவுகளுடன் வசிப்பது இல்லை. ஆதரவின்றி எத்தனையோ பேர் வாழ்கின்றனர். ஆதரவு இல்லாமலேயே உயிரிழக்கின்றனர்.

சில நேரங்களில் விபத்து, உடல்நலக் குறைவால் ஆதரவற்றவர்கள் சாலையில் உயிரிழக்கின்றனர். அந்த உடல்களை காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுஅவர்களது உடல்களை வாங்கி அடக்கம் செய்ய யாரும் முன்வருவதில்லை. அத்தகைய உடல்கள் நீண்ட நாட்களாக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்படுகிறன. தங்களது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட யாரும்இல்லையே என எண்ணும்போது, அந்த ஆத்மா எப்படி சாந்தியடையும்.

அதனால்தான், இந்த புண்ணியகாரியத்தை கடந்த 16 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இதற்கான செலவை யாரிடமும் பெறுவதில்லை. என் வருமானத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இதை செய்கிறேன். இந்தச் சேவையை என் தந்தையை தொடர்ந்து நானும் செய்வதில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மணிமாறனின் இந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2015 டிசம்பரில் சிறந்த சமூக சேவகருக்கான தேசிய விருதையும், தமிழக அரசு சிறந்த இளைஞருக்கான விருதையும் வழங்கியுள்ளன.

இதுதவிர, 2012-ல் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் 4 கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர் மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x