Published : 07 May 2019 10:07 PM
Last Updated : 07 May 2019 10:07 PM

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மோதிய மாநகர பேருந்து: 40 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாத போலீஸார்; காவல் ஆணையரிடம் புகார்

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர்மீது மாநகர பேருந்து மோதியதில் கை உடைந்தது. விபத்து குறித்து விசாரித்த போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வழக்கும் பதியாமல் 40 நாட்களாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

சென்னை ஷெனாய் நகர் டிபி சத்திரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் அந்தோணி(50).  பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அருகிலுள்ள சர்ச்சில் பக்தி பாட்டு பாடி அதில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையால் பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவரது மனைவி மேரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. வழக்கம்போல் கடந்த கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ஞாயிற்று கிழமை அந்தோணியின் மனைவி மேரிக்கு உடல் நிலை சரியில்லாததால், அந்தோணி மட்டும் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு பாட்டு பாட சென்றுள்ளார்.

சாலையோரம் நடந்துச் சென்ற அந்தோணி மீது மாநகர பேருந்து ஒன்று மோதியுள்ளது. பின்னர் பேருந்து நிற்காமல் சென்று விட்டது. பேருந்து மோதியதில் அந்தோணியின் ல்=வலது கை முறிந்தது. அதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனால் பல நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நிலைக்கு அந்தோணி தள்ளப்பட்டார். இந்த விபத்து நடந்த போது, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்தோணியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு சரி, அதன்பின்னர் பேருந்தை கண்டுபிடிக்கவோ, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவோ சிறு துரும்பையும் அசைக்கவில்லை.

விபத்து நடந்து சிகிச்சைக்குப்பின் பலநாள் அந்தோணி ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்து வழக்கு குறித்து கேட்டுள்ளார். ஆனால் இதோ அதோ என அலட்சியமாக பதில்வந்ததே தவிர ஒரு நடவடிக்கையும் இல்லை.

வாகனம் என்னவென்று தெரியவில்லை நடவடிக்கை என்று பதில் அளித்துள்ளனர். எங்களுக்கு எப்.ஐ.ஆர் காப்பி கொடுத்தால் இன்ஷுரன்ஸ் போட வசதியாக இருக்கும் என்று கேட்டும் கண்டுக்கொள்ளவில்லை. 40 நாட்களாகியும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட அந்தோணி வீங்கிய கையுடன், கிழிந்த சட்டையுடன் அழுதபடி தனது சகோதரியுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்.

விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது, நேரில் பார்த்த வாட்ச்மேன் ஒருவர் மாநகர பேருந்து மோதியது என்று சொல்லியிருக்கிறார். எதுவும் இல்லாவிட்டாலும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து என போலீஸ் ஒரு சர்ட்டிபிகேட் கொடுத்தால் காப்பீட்டுத் தொகை பெற உதவியாக இருக்கும் ஆனால் அடிபட்டவர் யாசகம் கேட்டு பிழைப்பவர் என்பதால் கண்டுக்கொள்ளவில்லை.

இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் அண்ணா நகர் போக்குவரத்து காவல் அதிகாரியிடம் தொடர்புக்கொண்டு கேட்டபோது அவர் மீது மோதிய வாகனம் அடையாளம் தெரியவில்லை என சாதாரணமாக கூற அடையாளம் தெரியாத வாகனம் என்று சான்றிதழ் தரலாமே என அவர் கேட்க சரிங்க விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் ட்ரெய்னிங் போயிருக்கிறார் என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி ஒருவர் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் 40 நாட்களாக விசாரணை நடத்தாமல் வழக்கை இழுத்தடித்ததாக புகாரின்பேரில் இது குறித்து விசாரிக்க போக்குவரத்து துணை ஆணையருக்கு (மேற்கு) மனு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x