

தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்றதால் தேமுதிகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. முரசு சின்னம் நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா எனும் இரு ஆளுமைகள் அவர்களைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருந்த நேரம். திரையுலகிலும், நடிகர் சங்கத்திலும் தனது நிர்வாகத்திறன் மூலம் கிடைத்த மரியாதை, தனக்கிருக்கும் நல்ல பெயர் காரணமாக 2004-ம் ஆண்டில் விஜயகாந்த் அரசியலில் அடி எடுத்து வைத்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என இழுத்தடித்ததால் மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள் விஜயகாந்தின் பேச்சால் கவரப்பட்டனர். திமுக -அதிமுகவுக்கு அடுத்து தமிழகம் முழுவதும் வார்டுதோறும் தனது ரசிகர் மன்றம் மூலம் கட்சியைக் கட்டமைத்தார் விஜயகாந்த்.
எம்ஜிஆருக்கு அடுத்து ரசிகர் மன்றங்களைக் கொண்ட ஏராளமான இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து பொறுப்புகளை அளித்து தேமுதிக எனும் கட்சியை உருவாக்கினார் விஜயகாந்த். அவரது பேச்சாற்றல், இரு கட்சிகளுடன் கூட்டு இல்லை கடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என அறிவித்து 2006-ல் தனித்துப் போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் முரசு சின்னத்தை அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த். 2006 சட்டப்பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் தேமுதிக வென்றது. விஜயகாந்த் தனித்து வென்றார். அந்தத் தேர்தலில் 27 லட்சத்து 66 ஆயிரத்து 223 வாக்குகளை தேமுதிக பெற்றது. வாக்கு சதவீதம் 8.45 ஆகும்.
விஜயகாந்த் வாங்கிய வாக்கு சதவீதத்தால் அதிமுக பெரிய அளவில் தோல்வியைத் தழுவியது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சி அமைந்தது.
அதன்பின்னர் விஜயகாந்தின் மதிப்பு குறையவே இல்லை. தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருந்த அவர் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார். அதில் தேமுதிக அனைத்து தொகுதியிலும் தோற்றது. பெற்ற வாக்குகள் 31 லட்சத்து 26 ஆயிரத்து 117. வாக்கு சதவீதம் 10.
2011-ல் திமுகவை வீழ்த்தவேண்டும் என்கிற முனைப்பில் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரள தனது தனித்துப் போட்டி கொள்கையைக் கைவிட்டு அதிமுக கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
29 இடங்களை வென்ற தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் 7.88 ஆகும். எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். அதன் பின்னர் அதிமுகவுடன் மோதல் ஏற்பட்டது. விஜயகாந்த் மற்றும் அவரது கட்சியினரின் போக்கு நாளடைவில் அரசியல் கட்சிகளின் வழக்கமான அரசியலுக்கு மாறியது.
2014-ம் ஆண்டு நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பலை அடிக்க பாஜக வெல்லும் என்கிற நிலையில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மிகப்பெரிய அணி அமைந்தது. அதில் தேமுதிகவும் இடம் பெற்றது. அந்த நேரம் ஊடகங்கள் உட்பட சமூக வலைதளங்கள் முழுவதும் விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாடு விமர்சிக்கப்பட்ட நேரம். அதை விமர்சனமாக எடுக்காமல் விரோதமாகப் பார்க்க ஆரம்பித்ததால் தனது கட்சி போகும் பாதை அவருக்குத் தெரியாமல் போனது.
அந்தத் தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெல்ல தேஜகூ 2 இடங்களை வென்றது. தேமுதிக ஒரு இடம்கூட வெல்ல முடியவில்லை. அந்தத் தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி சரிந்தது. 20 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 5.19 சதவீதமாக குறைந்தது. பின்னர் அந்தக் கூடாரமே கலைந்தது.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெல்லும் வாய்ப்பு இருந்தது. அதிக அளவு தொகுதிகளை திமுக ஒதுக்கத் தயாராக இருந்தும், திமுக கூட்டணிக்கு வரும் நிலையில் திடீரென மனம் மாறி மக்கள் நலக்கூட்டணிக்குச் சென்றார் விஜயகாந்த். இதனால் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி திமுகவில் இணைந்தனர்.
மக்கள் நலக் கூட்டணியில் திமுக, அதிமுக குறித்து பேசாமல் ஊடகங்களுடனான மோதல், வைகோ திடீரென தேர்தலில் நிற்க மறுத்தது, திமுக, அதிமுக வாக்கு பலம் காரணமாக மக்கள் நலக் கூட்டணி ஒரு தொகுதியைக் கூடப் பெற முடியாமல் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் மக்கள் நலக் கூட்டணி பிரிந்தது.
2016 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 34 ஆயிரத்து, 384 வாங்கிய. வாக்கு சதவீதம் 2.41.
அதன்பின்னர் தேமுதிக முற்றிலும் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. முக்கியத் தலைவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் கட்சித் தலைமைக்கு வர பிரேமலதா முயற்சிக்க அதற்கு தடைபோட்ட விஜயகாந்த் தானேபொதுச் செயலாளர், தானே தலைவர் என அறிவித்துக்கொண்டார்.
பொருளாளர் வெளியேறிய நிலையில் பிரமேலதா விஜயகாந்த் பொருளாளர் ஆனார். சுதீஷ் துணை செயலாளர் ஆனார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் தீவிர அரசியலிலிருந்து 2016 முதல் ஒதுங்க ஆரம்பித்தார். கட்சித் தலைவர் உடல் நலம் பாதிப்பு, முக்கிய நபர்கள் வெளியேறிய நிலையில் தேமுதிக தள்ளாடும் நிலைக்கு வந்தது.
பொதுத்தேர்தல் நடப்பதை ஒட்டி தமிழகம் வந்தார் விஜயகாந்த். ஆனாலும் அவரது உடல் நலன், தொண்டைப் பிரச்சினை காரணமாக அவரது செயல்பாடு முழுவீச்சில் இல்லாமல் போனது. மக்களவை பொதுத்தேர்தலை ஒட்டி விஜயகாந்தின் கூட்டாளிகள் அனைவரும் திமுக கூட்டணியில் ஏற்கெனவே இணைந்த நிலையில் விஜயகாந்துக்கும் ஸ்டாலின் நேரில் அழைப்பு கொடுத்தார்.
ஆனால், தேர்தல் நிலவரம், தமிழக நிலை, கட்சியின் நீண்டகால அரசியல் பயணம் அனைத்தையும் மறந்து திடீரென அதிமுக பக்கம் தாவியது தேமுதிக. காற்று ஒருபக்கம் அடிக்க இவர்கள் வேறு திசையில் பயணிக்க இந்தமுறையும் தேமுதிக தோல்வியைத் தழுவியது. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் எதிரணியால் தோற்கடிக்கப்பட்டனர்.
இதனால் இம்முறையும் வாக்கு சதவிகிதம் பாதாளத்துக்குச் சென்றது. வாக்கு சதவீதம் 2.19 சதவீதம் ஆனது. இதனால் தேமுதிக தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்தில் உள்ளது. தொடர்ந்து இரு தேர்தலில் 3 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குச் சரிவு என்பதும் அடுத்து மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் வரவும் தேமுதிகவுக்கு நெருக்கடியைத்தான் உருவாக்கும்.
‘தேர்தல் ஆணையம் விதிப்படி மொத்த தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்எல்ஏ இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 8 எம்எல்ஏக்களாவது இருக்க வேண்டும் அல்லது போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் மாநிலம் முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். அப்படி உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும் 8 சதவீத வாக்கு பெற்றிருக்கவேண்டும். இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகிவிடும்.
தேமுதிக கடந்த 3 தேர்தல்களிலும் 6 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளது. எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையும் பூஜ்ஜியம் என்பதால் மாநில அங்கிகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சின்னமும் நீடிக்குமா? என்பது கேள்விக்குறியே? தொடர்ந்து 3 முறை ‘ஹாட்ரிக் ஜீரோ’ பெற்ற கட்சியாக தேமுதிக விளங்குகிறது.
இதுகுறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தேமுதிக கடந்த மூன்று தேர்தல்களில் குறைந்த அளவில் வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளது. கடைசி இரண்டு தேர்தலில் 3 சதவிகிதத்துக்கும் குறைவாக பெற்றுள்ளது. இது அக்கட்சியின் மாநில அந்தஸ்த்து அங்கீகாரத்தை பாதிக்குமா?
அதன் சதவீதம் மற்றும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் சீட்டுகள் வெல்லவேண்டும். என்கிற கணக்கு வைத்திருப்பார்கள். ஐந்து ஆண்டு அல்லது 2 தேர்தல் என கணக்கு வைத்திருப்பார்கள். அதன்படி குறிப்பிட்ட சதவீத வாக்குகள், அல்லது குறிப்பிட்ட வகையிலான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். நீங்கள் சொல்வதுபோல் கடந்த 3 தேர்தல்களிலும் அவர்கள் அந்த தகுதியைப் பெறாவிட்டால் மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தை இழப்பார்கள்.
சின்னமும் பறிக்கப்படுமா?
சின்னம் விவகாரம் தனி. குறிப்பிட்ட சதவீத வாக்கு, உறுப்பினர் எண்ணிக்கை என சின்னம் விவகாரத்தில் நாங்கள் கடைபிடித்தோம். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அவரவர் வழக்கு தொடுத்தார்கள். உச்ச நீதிமன்றம் தகுதி இருந்தால் வழங்கவேண்டியது தானே என்று தெரிவித்தது.
அதன்பின்னர் இதேபோன்று பலரும் உச்ச நீதிமன்றத்தை அணுக இதே தொடர்கதையாக மாறியதால் தற்போது அது அப்படி கடுமையாகப் பார்க்கமுடியாமல் நடக்கிறது. ஆகவே அங்கீகாரம் இல்லாவிட்டாலும் சின்னம் ரத்தாகுமா? என்பதை என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை.
இவ்வாறு கோபால்சாமி தெரிவித்தார்.