

உன் வெற்றி முக்கியமானது என்று எழுதி திருமாவளவனுக்கு தான் வரைந்த ஓவியத்தைப் பரிசாக அளித்துள்ளார் பொன்வண்ணன்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, 303 தொகுதிகளில் வென்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து பலரும் திருமாவளவனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில்,வெற்றி பெற்ற திருமாவளவனுக்கு தான் வரைந்த ஓவியத்தைப் பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் பொன்வண்ணன். நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன் மிகச்சிறந்த ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமாவளவனுக்குப் பரிசாக அளித்த ஓவியத்தில் 'உன் வெற்றி முக்கியமானது!' என்று தெரிவித்துள்ளார் பொன்வண்ணன்.
இந்த ஓவியம் பரிசளிப்பு தொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், “இன்று சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் திரைப்பட நடிகர் பொன்வண்ணன் தனது கைவண்ணத்தில் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.