Published : 16 May 2019 03:48 PM
Last Updated : 16 May 2019 03:48 PM

ஸ்டாலின் கணக்கு வாத்தியார் போன்று ஆகிவிட்டார்; மக்கள் கணக்கு அவருக்கு தெரியாது: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ஸ்டாலின் கணக்கு வாத்தியார் போன்று ஆகிவிட்டார் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் விளாச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

கமல் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா?

எம்ஜிஆர் சமூகக் கருத்துகளை திரைப்படங்களில் சொன்னார். ஆனால், சினிமாவிலும் கமல்ஹாசன் நல்ல கருத்துகளைச் சொல்லவில்லை. இப்போது அரசியலிலும் அப்படித்தான் இருக்கிறார். அதனால்தான் பல வழக்குகளைச் சந்திக்கிறார். சகோதரர்களாக எல்லோரும் இருக்கும்போது, விஷ விதையை விதைக்கக் கூடாது.

இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகாவது, தான் சொன்னது தவறு என கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். நீதிமன்றம் கமல்ஹாசனை முன் ஜாமீன் வாங்க அறிவுறுத்தியிருக்கிறது. அதனால், இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதே?

அவர் சாதாரண குடிமகனாக கருத்து சொன்னதாகக் கூறியுள்ளார். கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால் தானும் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், கமல் பிடிவாதமாக இருக்கிறார். தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பதுதான் கமலுக்கு ஆசையா?

தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

திமுக கூட்டணி காகித ஓடம் போன்றது. ஸ்டாலின் கணக்கு வாத்தியார் போன்று ஆகிவிட்டார். ஸ்லேட்டை எடுத்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார். மக்கள் கணக்கு அவருக்குத் தெரியவில்லை. கூட்டல், பெருக்கல் தான் அவருக்குத் தெரியும். ஆனால், அவருக்கு கழித்தல் தெரியாது. 23 ஆம் தேதி அவர் அரசியலில் இருந்து கழிக்கப்பட்டு விடுவார்.

பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக நிரூபிக்கத் தயாரா என ஸ்டாலின் கூறியுள்ளாரே?

ஸ்டாலின் பாஜகவுடன் பேசவில்லை என மறுக்கவில்லை. நிரூபிக்கத்தான் சொல்கிறார். அதனால் அவர்கள் பேசியிருக்கின்றனர் என்பதுதான் உண்மை. எம்ஜிஆர் சொன்னது போன்று திமுக ஒரு தீய சக்தி. அவர்களுக்கு அதிகாரப் பசி மட்டுமே உண்டு. அதற்காக எத்தனை குட்டிக்கரணம் வேண்டுமானாலும் போடுவார்கள்.

பாஜகவும் திமுகவுடன் பேசியிருந்தால் அது கூட்டணி தர்மத்தை மீறுவதாகாதா?

பாஜக கூட்டணி குறித்துப் பேசவில்லையே. பாஜகவுக்கு ஸ்டாலின் காவடி தூக்குகிறார். ஒரே நேரத்தில் 9 படகுகளில் சவாரி செய்கிறார். அந்த 9 படகுகளும் ஓட்டைப் படகுகள்.

அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் தினகரன், அவருக்கு துணை ஸ்டாலின், காங்கிரஸ். அவர்களால் அதிமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அதிமுகவைக் தொட்டவன் கெட்டான்.

திருட்டுத்தனமாக, போலியாக ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். சூலூர், திருப்பரங்குன்றம் செல்லும் டிடிவி தினகரன், இதுவரை ஏன் ஆர்.கே.நகரில் தெருத்தெருவாகச் சென்று நன்றி சொல்லவில்லை? இந்தத் தேர்தல் முடிவுகள் அவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.

கருணாநிதி காலத்திலேயே அதிமுக ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. இப்போது ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x