

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் போராட்டத்தின்போது, வேண்டுமென்றே சிக்னல்களை தவறான முறையில் இயக்கியதாகவும், சேதப்படுத்தி ரயில் போக்குவரத்தை நிறுத்த சதி செய்ததாகவும் கூறி 3 பணியாளர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம், நிரந்தரப் பணியாளர்கள் பணியில் இருக்கும் போதே ஒப்பந்தப் பணியாளர்கள் பலரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களை விட கூடுதல் சம்பளம் கொடுத்தததற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதுதவிர சம்பளப் பிடித்தம், வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டதாக கூறி ஊழியர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர்களுடைய கோரிக்கைகளுக்கு மெட்ரோ நிர்வாகம் செவி சாய்க்காத சூழலில் கடந்த அக்டோபர் மாதம் 8 ஊழியர்கள் சேர்ந்து பணியாளர் சங்கம் ஒன்றை துவக்கினார்.
சங்கம் ஆரம்பித்ததற்காக கடந்த டிசம்பர் மாதம் அந்த எட்டு ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர் அந்த எட்டு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது.
இதை கண்டித்து மற்ற ஊழியர்கள் அனைவரும் மெட்ரோ நிர்வாகம் வளாகத்திற்குள்ளே தர்ணாவில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு நீதிகேட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினர் 50க்கும் மேற்பட்டோர் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்திற்கு மெட்ரோ நிர்வாகம் செவி சாய்க்காத நிலையில் ஆங்காங்கே ரயில்களை நிறுத்தி விட்டு ஊழியர்கள் இறங்கிவிட்டனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை முடங்கியது. பின்பு தற்காலிக பணியாளர்கள் மூலமாக ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதனிடையே மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ‘‘“எங்கள் பணியாளர்களில் இருவர் தானியங்கி சிக்னல் அமைப்பில் வேண்டுமென்றே கோளாறு ஏற்படுத்தி விட்டனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளிடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது’’ என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஏப்ரல் 29-ம் தேதி மெட்ரோ ரயில் சேவையை முடக்க சதி செய்ததாக கூறி 2 போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் மற்றும் ஒரு டெப்போ கட்டுப்பாட்டாளர் ஆகிய 3 பேரை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று பணியிடை நீக்கம் செய்துள்ளது. தவறான சிக்னல்களை வழங்கி மெட்ரோ ரயிலை இயக்கவிடாமல் இவர்கள் சதி செய்ததாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.