

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்டதால் தமிழகத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்: "தமிழகத்தின் முதலமைச்சராக, ஜெயலலிதா பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்டதால், தமிழத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. அதோடு மிகப் பெரிய பதவியில் இருந்தாலும், "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
'உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும், தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்' என்ற இயற்கையின் நியதியை யாராலும் மாற்ற முடியாது. இதற்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவும் விதி விலக்கல்ல.
சுமார் 18 வருடங்கள் நடைபெற்ற இந்த வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்து ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.
1991 - 96 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்கு 60 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி என்பதுதான் வழக்கு. வழக்கு தொடரப்பட்ட 1997-ம் ஆண்டில் இருந்து இன்று வரை இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் மக்கள் வரிப்பணம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பல்வேறு காரணங்களை விதவிதமாக சொல்லி இந்த வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி தடுத்து நிறுத்திட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த வழக்கிற்காக இந்தியாவின் பிரபலமான மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் ஆஜரானார்கள். ஆனால், இதை எல்லாம் முறியடித்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தீர்ப்பை ஒட்டி அதிமுக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பெங்களூரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது. இதுபோன்ற நிகழ்வுகள் வரவேற்கதக்கதல்ல, பெங்களூரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேறுவழியின்றி காவல்துறையினர் தடிஅடி நடத்தியுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலலிதா குற்றவாளி என்றும் நான்கு ஆண்டு சிறை தண்டனையோடு, "100 கோடி ரூபாய் அபராதம் விதித்து" தீர்ப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவினர் அராஜகத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடைகள், தொழில்நிறுவனங்களை மூடச்சொல்லி அடித்து நொறுக்குவதும், பஸ் கலை தீ வைத்து எரிப்பதும், சாலைகளில் செல்கின்ற பஸ், லாரி, கார், போன்ற வாகனங்களை கல்வீசி தாக்குவதும், சாலை மறியல் செய்வதும் என வன்முறையில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பது மிகவும் கண்டிக்கதக்கது.
இந்த சம்பவங்கள் நடைபெறும் பொழுது காவல் துறையினர், கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். ஆளும் கட்சியினரே வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளதால் மத்திய அரசின் பாதுகாப்பு படையின் மூலம் தமிழகத்திற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக காவல் துறை இது போன்ற வன்முறை சம்பவங்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது தரப்பட்டுள்ள இந்த தீர்ப்பு தவறு செய்பவர்களுக்கு பாடமாக இருக்கும். ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கிறது என ஆட்டம்போடும் ஆட்சியாளர்கள் இதை பார்த்த பிறகாவது திருந்திட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவேண்டும் மாறாக லஞ்சம், ஊழல், முறைகேடு, அராஜகம் என செய்து ஆட்சி நடத்தினால் தண்டனை நிச்சயம் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.