Published : 03 May 2019 07:39 PM
Last Updated : 03 May 2019 07:39 PM

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: ஸ்டாலின் மீது தமிழக தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்

பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதால் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கோடநாடு கொலை குறித்து பேசியது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் குறித்து அவதூறாகப் பேசுவதாக அவர் மீது அதிமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் உயர் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினையை தீர்த்தது. தேர்தல் பிரச்சாரத்தில் தனிப்பட்ட முறையில் தலைவர்கள் அதிகம் விமர்சித்துக்கொண்டனர். காவலாளி என்று பிரதமர் மோடி சொல்ல அதுகுறித்தும் ஸ்டாலின் பேசியது பாஜகவினரைத் கொந்தளிக்க வைத்தது.

பதிலுக்கு ஸ்டாலினை பாஜகவினர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்து தற்போது 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 2 நாட்களாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின்  பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று ஓட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின் வேனில் வேட்பாளருடன் வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவருடன் கனிமொழியும் பிரச்சாரத்தில் இருந்தார். அப்போது பேசிய ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தார்.

தனது பேச்சின் ஊடே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசிய அவர்,  ‘ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் 13 பேரை சுட்டுக்கொன்ற ஆட்சி மோடியின் ஆட்சி, சுட உத்தரவு போட்டது மோடி, அந்த உத்தரவை ஏற்றுச் சுட்டது எடப்பாடி பழனிசாமி. இவ்வளவு அக்கிரமங்களை செய்யக்கூடிய ஒரு ஆட்சி’ என்று பேசினார்.

இந்தப் பேச்சால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் ஸ்டாலின் பிரதமர் குறித்து பேசிய யூடியூப் பதிவுகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அவர்களது புகாரில்,  ''கடந்த ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வழிகாட்டுதலின் அடிப்படையில் சிபிஐ வசம் விசாரணை ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இது சம்பந்தமாக சிபிஐ பல பிரிவுகளில் பலர் மீது எப்.ஐ.ஆர் போட்டுள்ளது. அதில்  பல அரசு அலுவலர்களும் அடக்கம். விசாரணையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு  மே.1-ம் தேதி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசும்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்தச் சொன்னது பிரதமர் மோடி என்று பேசியுள்ளார். இது அப்பட்டமான தவறான தகவல்.  அவதூறு கிளப்பும் பேச்சு. பிரதமருக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டும் விதத்தில் ஸ்டாலின் பேச்சு அமைந்துள்ளது.

இது தேர்தல் நடத்தை விதியை மீறும் செயலாகும், தேர்தல் நடத்தை விதி பிரிவு 5-ல் மற்ற அரசியல் கட்சிகள், தனி நபர்களுக்கு எதிராக ஆதாரமற்ற தவறான தகவல்களைப் பேசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தனது அரசியல் லாபத்துக்காக இதுபோன்ற ஆதாரமற்ற, தவறான தகவல்களைத் தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் பதிவு செய்து வருகிறார். அவரது பேச்சு அடங்கிய யூடியூப் பதிவை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆகவே மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்'' என புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகாருடன் ஸ்டாலின் பேசிய யூடியூப் காணொலி அடங்கிய பென் டிரைவும் சத்யபிரதா சாஹுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x