

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பொறுத்தவரை, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் என நிரூபணமானது போலத்தான் இப்போதும் நடக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
''புதிய சாலைகள் அமைப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மக்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது. விபத்துகளைத் தவிர்ப்பது, எரிபொருளை மிச்சப்படுத்துவது மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியே சாலை மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
போதிய மழை இல்லாததால் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி 39 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறும். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மாறுபட்ட முடிவுகளை வெளிப்படுத்தியிருப்பது அவை கருத்துத் திணிப்புகள்.
2016-ல் இதே ஊடகங்கள் அதிமுக தோல்வி அடையும் என்று கூறினீ. நானே தோல்வி அடைவேன் என்றுதான் தெரிவித்தன. ஆனால், நான் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். ஆகவே இது கருத்துத் திணிப்பு.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய அளவில் பாஜக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பது பற்றி சொல்லவில்லை. தமிழகத்தைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். எனக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை மட்டுமே தெரியும்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.