Published : 07 May 2019 07:27 PM
Last Updated : 07 May 2019 07:27 PM

திருவள்ளூரில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோடை கத்திரி வெயிலின் வெம்மையைத் தணிக்கும் விதத்தில் திருவள்ளூரில்  இடி, சூறாவளியுடன் கூடிய ஐஸ் கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு கடும் வெப்பமாக இருந்தது. இன்று மதியம் திருவொற்றியூரில் சைக்கிளில் சென்ற 75 வயது முதியவர் வெயில் தாளாமல் சுருண்டு விழுந்து பலியானார்.  

வெயில் கடுமையாக வாட்டி வதைத்த நிலையில் இன்று மாலை திடீரென மேகங்கள் திரண்டு  ஜில்லென்ற காற்று வீசி திடீரென சூறாவளிக் காற்றாக மாறி அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

திருவள்ளூர்,  ஈக்காடு, வேப்பம்பட்டு, அரண்வாயல், செவ்வாய்ப்பேட்டை, திருவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும், சில இடங்களில்  ஐஸ்கட்டி மழையும் பெய்தது.  சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரண்வாயலில் பெய்த மழையால் மின் கம்பங்கள் சாய்ந்தன.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  வேப்பம்பட்டு பகுதியில் பெய்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலமாக மரங்கள் அகற்றப்பட்டன.

அக்னி நட்சத்திரம் வெயிலில் வீட்டை விட்டே வெளியே வர முடியாத நிலையில் இருந்த திருவள்ளூர்வாசிகள் இன்று பெய்த மழையால் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று ஓசூர் சிப்காட் பகுதியிலும் ஆலங்கட்டி மழை பெய்தது.

திருவள்ளூர் பகுதியில் பெய்த மழையால் சென்னை திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை உள்ளிட்ட தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் காற்றில் ஈரப்பதம் இல்லாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x