Last Updated : 18 May, 2019 07:12 AM

 

Published : 18 May 2019 07:12 AM
Last Updated : 18 May 2019 07:12 AM

சென்னை அருகே மீஞ்சூரில் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் முதல் காவேரிப்பாக்கம் வரை பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை; சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பி தாராளமாக தண்ணீர் பெறலாம் என்கிறது ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவை யான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் இயல்பை விட குறைவாகப் பெய்ததால், ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டது. பல நீர்நிலைகள் வறண்டுவிட்டன.

சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங் களை வறட்சி மாவட்டங்களாக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏப்ரலில் திருவள்ளூர், திருச்சி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது என்று நீர் வளத் துறை தெரிவித்திருக்கிறது.

புவிவெப்பமயமாதல் காரண மாக ஆண்டுதோறும் பருவமழை இயல்பான அளவு பெய்வதில்லை. இந்நிலையில் மழைநீர் சேகரிப்பு மட்டுமல்லாமல் மாற்று வழிகளிலும் தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது தடுப்பணை யில் மழைநீரை சேகரிக்க வேண்டும். அதற்கு ஆங்காங்கே தடுப்பணை கள் கட்ட வேண்டும். ஏரி, குளங் களை தூர் வாரி கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்று நீரியல் வல்லுநர்கள் பல்வேறு யோசனைகள் கூறுகின்றனர். இருப்பினும், ஏரி, குளம், தடுப்பணை ஆகியவற்றில் தண்ணீரை சேமித்தாலும் அதை நீண்டகாலத்துக்கு தேக்கிவைத்து பயன்படுத்த முடியாது. சில மாதங்களில் அதைப் பயன்படுத்தி யாக வேண்டும். இல்லாவிட்டால், தற்போதைய வெயிலுக்கு அது ஆவியாகிவிடும்.

விவசாயத் தேவைகள்

மாநிலம் முழுவதும் குறைந்து விட்ட நிலத்தடி நீரை நம்பி குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிலை வரலாம் என்று கருதி 1980-களிலேயே பல்வேறு ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டன. அதில், ஒன்று தான் சென்னை அருகே பூமிக்கடி யில் இயற்கையாக நீண்ட கால்வாய் போல அமைந்துள்ள அணை. இந்த அணையில் கழிவுநீரை சுத்திகரித்து சேமித்தால் குடிநீருக்கு மட்டுமல்லா மல் விவசாயத்துக்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கும் என்று கூறப்படு கிறது. இந்த நடைமுறை 1970-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது:

இஸ்ரேல் நாட்டில் கழிவுநீர் 100 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு விவசாயத் துக்குப் பயன்படுத்தப்படுகிறது. அங்கு பாலைவனத்தில் செயற்கை ஏரியை உருவாக்கி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை சேமித்து வேளாண் பணி களுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த தண்ணீரில் திராட்சையை அதிக அளவில் விளைவித்து, அதில் இருந்து தயாரிக் கப்படும் பிரபல ஒயின் மதுபானம் உலகம் முழுவதும் விற்கப்படுகிறது.

இஸ்ரேல் போல சுத்திகரிக்கப் பட்ட கழிவுநீரில் தமிழ்நாட்டிலும் விவசாயம் செய்யப்படுகிறது. திருச்சியில் உள்ள பெல் (பாரத மிகு மின் நிறுவனம்) தொழிற்சாலை குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதன் அருகே உள்ள பாசன வாய்க்காலில் விடப் படுகிறது. அந்தத் தண்ணீர், கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து வேளாண் பணிகளுக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல தமிழகம் முழுவதும் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியும்.

தமிழக அரசுக்கு பரிந்துரை

சென்னையில் குடிநீர் தட்டுப் பாடு ஆண்டுதோறும் பெரும் பிரச்சி னையாக இருக்கிறது. இதை சமாளிக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து பெருமளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து 1987-ம் ஆண்டு தமிழக அரசுக்கு பரிந்துரையாக ஓர் அறிக்கை அளித்தது.

இந்த ஆய்வின்போது, திருவள் ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்தில் இருந்து வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டையை ஒட்டிய காவேரிப்பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கை யான நீண்ட கால்வாய் வடிவில் அணை அமைந்திருப்பது (Buried Channel) கண்டறியப்பட்டது.

நீர் ஆவியாக வாய்ப்பில்லை

கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்தில் இருந்து குறுக்கு வெட்டு தோற்றத்தில் பார்த்தால், இந்த இயற்கையான அணை கடல்மட்டத்தில் இருந்து 40 அடி ஆழத்தில் அமைந்திருக்கிறது. கடல்மட்டத்தில் இருந்து கீழே 40 அடி வரை களிமண் இருக்கிறது. அதற்கு கீழே 20 அடி ஆழத்தில் மணல் உள்ளது. அதற்கும் கீழே களிமண்ணும், அதன் அடியில் பாறையும் இருக்கின்றன. இந்த அணைக்கு மேலும், கீழும் களிமண் இருப்பதால் நீர் ஆவியாகாது. பூமிக்கடியிலும் உறிஞ்சப்படாது.

இந்த அணை, பொன்னேரி, பஞ்செட்டி, தாமரைப்பாக்கம், பூண்டி அணை, கேசவரம் வழியாக வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை ஒட்டி அமைந்துள்ள காவேரிப்பாக்கம் வரை செல்கிறது. இந்த அணை, உள்ளே செல்லச் செல்ல மணல் பகுதி அகன்றும் ஆழமாகவும் காணப்படுகிறது. இதனுள்ளே சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை செலுத்தி நிரப்பலாம்.

சென்னையில் தினமும் சராசரியாக 40 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேறு கிறது. கொடுங்கையூர், நெசப்பாக்கம், கோயம்பேடு, பெருங்குடி ஆகிய 4 இடங்களில் சுத்திகரிக்கப்படும் கழிவு நீரை ஓரிடத்தில் சேகரித்து பக்கிங்ஹாம் கால்வாய் ஓரத்தில் குழாய் வழியாக மீஞ்சூர் முகத்துவாரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு 40 அடி ஆழத்துக்கு குழாய் அமைத்து அதன் வழியே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை அணைக்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு தினமும் செலுத்தி னால், அணை கொஞ்சம், கொஞ்சமாக நிரம்பும். அணை முழுவதுமாக நிரம்புவதற்கு 8 ஆண்டுகள் வரை ஆகும். அதையடுத்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.

அணை நிரம்பிவிட்டால், சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங் களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருபகுதிக்கும் தேவையான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும்.

தொலைநோக்குத் திட்டம்

பூமிக்குள் 40 அடி ஆழத்தில் தேக்கப்படும் தண்ணீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதன்பிறகு இந்த 3 மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப் பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. 32 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டியது அவசர அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x