சென்னை சாலைகளில் மோட்டார் பந்தயம்: கடுமையான சட்டம் வருமா?

சென்னை சாலைகளில் மோட்டார் பந்தயம்: கடுமையான சட்டம் வருமா?
Updated on
4 min read

சென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் அதிகரித்து வருகிறது. போலீஸார் சட்டத்தை கடுமையாக்குவார்களா? என்கிற கோரிக்கை வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் மெரினா கடற்கரையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் ரேஸில் ஈடுபட்ட 11 இருசக்கர வாகனங்கள் சிக்கின.

சென்னையில் அதிவேக மோட்டார் சைக்கிள்களில் பந்தயம் கட்டி சீறிப்பாய்ந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் கொடுங்கையூரில் ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிள் ரேஸில் ஈடுபட்டு பழுதான வாகனத்தை சரிசெய்ய பணமில்லாமல் அதே மாடலில் மோட்டார் சைக்கிள்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்து சிக்கினார்.

மது, கஞ்சா, இருமல் மருந்து போன்ற போதை வஸ்துகளை உபயோகித்துவிட்டு அதே போதையுடன் சாலையில் மோட்டார் சைக்கிளை கண்டபடி ஓட்டும் இவர்களால் பொதுமக்கள், சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.

சென்னையில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடத்துவதற்கு குழு உள்ளது. இதில் அவரவர் தொடர்பு மூலம் மட்டுமே இணைய முடியும். ரகசியமாக இயங்கும் இந்த குழுக்கள் மோட்டார் சைக்கிள் பந்தயங்களை சென்னையில் ஓஎம்ஆர் சாலை, போரூர், சென்னை பெசண்ட் நகரிலிருந்து நுங்கம்பாக்கம், அடையாரிலிருந்து ராயபுரம் என பல ரூட்டுகளில் ரேஸ் நடத்துகிறார்கள்.

இவ்வாறு செல்வதற்கான நேரமும் பல நேரம் வித்தியாசப்படுகிறது. நள்ளிரவு ரேஸ், பீக் ஹவர் ரேஸ், வார இறுதி நாட்களில் ரேஸ் என பலவகைப்படுகிறது. இதில் வெல்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் அல்லது மோட்டார் சைக்கிள் என பெரிய அளவில் பரிசு உண்டு.

இதனால் இளைஞர்கள் புற்றீசல்போல் இதில் விழுகிறார்கள். போலீஸாரும் எங்கும் மடக்குவதில்லை என்பது இவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே. சில நேரம் இவர்களின் அதீத வேகம் அவர்களுக்கே எமனாகிவிடுகிறது.

இவ்வாறு நடக்கும் பைக் ரேஸ்களை போலீஸார் அவ்வப்போது பிடித்தாலும் பெரிய மனிதர் வீட்டு பிள்ளைகள் என்பதால் சிபாரிசோடு வந்து மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தோ சிறிய அளவில் பைன் கட்டியோ சென்று விடுவதால் சட்டத்தை மீறும் துணிச்சல் வருகிறது.

மோட்டார் வாகனச் சட்டத்தில் ரேஸ் போவதை தடுக்க கடுமையான சட்டம் இல்லை. தாறுமாறாக வாகனத்தை ஓட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறாக வாகனத்தை இயக்குவது போன்ற பிரிவுகள் போட்டு அனுப்பும் நிலை உள்ளது.

போக்குவரத்து போலீஸார், சட்டம் ஒழுங்கு போலீஸார் இருவரிடையே யார் இவர்களை மடக்கிப்பிடிப்பது என்கிற போட்டி தனியாக நடக்கிறது. இவ்வாறு உயிரைப்பறிக்கும் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் சாலைகளில் நடத்துவதை தடுக்க என்ன சட்டம் உள்ளது. ஐபிசி பிரிவில் இதற்கான சட்டம் உள்ளதா?

இதுகுறித்து சட்ட நிபுணர் ரமேஷ் நடராஜனிடம் இந்து தமிழ் திசை சார்பாக கேட்டபோது அவர் கூறியதாவது:

விபத்துக்கு உள்ள பிரிவு என்ன?

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு நடந்தால் ஐபிசியில் 304(எ) என்கிற பிரிவு உள்ளது. எதிர்பாராமல் விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது. அதை விபத்துக்காரணமான உயிரிழப்பாக பார்க்கின்றனர். அதனால் எளிதாக ஸ்டேஷன் ஜாமீனில் வெளிவந்து வழக்கை சந்திக்கின்றனர்.

அப்படியானால் இதுபோன்ற மோட்டார் சைக்கிள் பந்தயம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றிற்கு கடும் தண்டனை என்ன?

அதிவேகமாக வாகனம் ஓட்டுவது தாறுமாறாக வண்டி ஓட்டுவதைத்தான் குறிக்கிறது rash driving சட்டம் குறிப்பிடுகிறது. அதன்பின்னர் சுப்ரீம் கோர்ட் இதையெல்லாம் கணக்கில் எடுத்து சில மாறுதல்களை கொண்டு வந்தது. 304(2) என்கிற பிரிவை கொண்டு வந்தது.

சாதாரண விபத்து எதிர்பாராமல் நடந்தால் அது விபத்து மட்டுமே. ஒருவன் குடித்துவிட்டு தான் குடித்துள்ளோம் அதனால் வாகனத்தை ஓட்டக்கூடாது, ஓட்டினால் விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் அது கொலையில்லாத மரணம் என கருதப்படுகிறது. அது கொலை செய்வதற்கு இணையாக தண்டனை கொடுக்கப்படுகிறது.

ஒருவர் வேகமாக பொதுமக்கள் பாதிக்கும்படி வாகனத்தை இயக்கினாலே தப்பு என்று சட்டம் சொல்கிறது. ஆனால் பந்தயம் கட்டி மோட்டார் ரேஸ் நடத்துவது, அதிலும் போதை மருந்து சாப்பிட்டுவிட்டு வேகமாக வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய குற்றம்.

இவர்கள் ஓட்டும் வேகத்தினால் விபத்து நடக்கும் என தெரிந்தும் வேகமாக வாகனத்தை இயக்குகிறார்கள். இவர்களை போலீஸார் அவ்வப்போது சோதனை செய்து பிடித்து அபராதம் செய்தால் அடங்கும். முதலில் பைக்குகளை பறிமுதல் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்.

நீங்கள் சொல்வது குற்றம் நடந்தப்பின், குற்றம் நடக்க வாய்ப்பு உள்ள இடத்தில் அதை தடுக்கும் நடவடிக்கை இல்லையே?

இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட இணை ஆணையர் ஜெயகவுரி பார்த்துச் சொன்னதால் போலீஸார் மடக்கி பிடித்தனர். ஆனால் போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைத்து விட்டனர். போக்குவரத்து போலீஸார் பெரும்பாலும் விபத்துகளையே சாதாரண மோட்டார் வாகன சட்டம் அடிப்படையில் எளிதாக அணுகுகின்றனர்.

பிடிப்பவர்கள் அவர்களே தண்டிக்கும் வகை இல்லாததால்தான் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு போலீஸார் நாம் பிடித்து போக்குவரத்து போலீஸாரிடம்தானே ஒப்படைக்கப்போகிறோம் என ஆர்வம் காட்டுவதில்லை. இதை குற்றச்செயலாக பதிவு செய்து பிடிக்கும் சட்டம் ஒழுங்கு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி சட்டம் ஐபிசியில் உள்ளதா?

இருக்கு, தாறுமாறாகவும், இடையூறு ஏற்படுத்தும்வண்ணம் வாகனம் ஓட்டுவது போன்ற செக்‌ஷன்கள் உள்ளன. ஆகவே திருட்டு வாகனங்களை கண்காணிப்பது, தாறுமாறாக வாகனம் ஓட்டுவது, நம்பர் பிளேட்டை சரிபார்க்கும் சாஃப்ட்வேர் கொண்டு வருவது போன்றவகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெரும்பாலான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் திருட்டு வாகனங்களில் ஈடுபடுகின்றனர். நம்பர் பிளேட் வேறு வாகனத்துடையதை உபயோகப்படுத்துகின்றனர். ஆகவே அதையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் குற்றங்கள், இதுபோன்ற ரேஸ் ஓட்டுவதை தடுக்கலாம்.

அரசு இதில் என்ன செய்ய முடியும்?

முதலில் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். இந்தியாவில் வாகனங்களை இயக்க 100 கி.மீ மேல் வேகம் போக முடியாது கூடாது என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் 250 கி.மீ.செல்லும் வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிப்பது ஏன். வெளிநாடுகளில் அதற்குரிய சாலைகள் உள்ளது. ஆனால் இங்கு அப்படி போகவே முடியாதபோது அப்படிப்பட்ட வாகனங்களை தயாரிக்க அனுமதிப்பது எதனால்.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், அமெரிக்காவில் மிகப்பெரிய மோட்டார் பைக் சாம்பியன், நம்மூரை சேர்ந்த இளைஞர், கடந்தவாரம் சென்னை வந்தவர் இங்கு மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது, தண்ணீர் லாரிக்குள் சிக்கி உயிரிழந்துவிட்டார். அப்படித்தான் இருக்கிறது இன்றைய போக்குவரத்து நிலை.

பெற்றோர்கள் இதில் என்ன செய்ய வேண்டும்?

பெற்றோரும் 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு அதிவேக மோட்டார் சைக்கிள்களை வாங்கித்தருவதை தவிர்க்கவேண்டும், அவ்வாறு வாங்கித்தருவதாக இருந்தால் 18 வயது கடந்தப்பின்னர், லைசென்ஸ் எடுத்து முறையாக ஹெல்மட் அணிந்து ஓட்டும்படி கூற வேண்டும்.

அதிக வேகத்தை தடுக்க என்ன வழி?

ரேஸ் ஓட்டுபவர்களை, வேகமாக தாறுமாறாக செல்பவர்களை ஆங்காங்கே போலீஸார் மடக்கிப்பிடிக்கவேண்டும், இன்னொரு வார்த்தையில் சொன்னால் அதிக வேகத்திலும், தாறுமாறாகவும் செல்லும் வாகனங்களை சாலை ஓரங்களில் நின்று கண்காணித்து பிடித்தால் பயம் வரும் யாரும் கண்டபடி வாகனம் ஓட்ட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in