தேர்தல் கணிப்பு என்பது ராசி பலன் போன்றதே: கி.வீரமணி விமர்சனம்

தேர்தல் கணிப்பு என்பது ராசி பலன் போன்றதே: கி.வீரமணி விமர்சனம்
Updated on
2 min read

தேர்தல் கணிப்பு என்பது ராசி பலன் போன்றதே என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "யாருக்குச் சாதகமாகவும் - யாருக்குப் பாதகமாகவும் இருந்தால்கூட, நம்மைப் பொறுத்தவரை கருத்துக் கணிப்புகளை ஏற்பதோ, அதனை வைத்து தேவையற்ற முறையில் மேலும் கருத்துகள் - அபிப்பிராயங்களைச் சொல்லுவதோ கால விரயமேயாகும் என்பது உறுதியான கருத்தாகும்.

பல நேரங்களில் கருத்துக் கணிப்பு என்று ஊடகங்களால், தொலைக்காட்சிகளால் சித்தரிக்கப்படுவது பெரிதும் 'கருத்துத் திணிப்பே' ஆகும்.

தேர்தல் கணிப்பு - ராசி பலன் போன்றதே!

ராசி பலன், ஜோதிடப் பலன் கூறுவோர் வரிசையில் இதுவும் ஒருவகை - அவ்வளவுதான். வெறும் வாயை மெல்லுவோருக்குக் கிடைத்த கொஞ்சம் அவல் ஆகும்.

இதைத் தடை செய்யவேண்டும்; அல்லது தவறாகப் போனால் அதற்குரிய பொறுப்பை வெளியிட்டவர்கள் ஏற்று, தண்டனைக்கு ஆளாக்கப்படல் வேண்டும்.

கடைசி நேரத்தில் வாக்களித்த பிறகு அவர்களிடம் திரட்டிய கருத்து என்று வெளியிடுவதுகூட சரியாகவே அமைவதில்லை. இந்தியத் தேர்தல் முடிவுகளில் எடுபடாத அப்பணியில் பல காலம் ஈடுபட்ட தனியார் தொலைக்காட்சியின் நிறுவனரும், சிறந்த அரசியல் விமர்சகருமான பிரணாய் ராயும், டோராப் ஆர்.சோப்ரிவாலாவும் இணைந்து அண்மையில் இந்தியத் தேர்தல்கள் முடிவு ஆய்வுகளைப் பற்றி எழுதியுள்ள ஒரு அருமையான ஆங்கில நூல் வெளிவந்துள்ளது. 'தி வெர்டிக்ட் - டீகோடிங் இந்தியாஸ் எலெக்‌ஷன்ஸ்' என்பது அப்புத்தகத்தின் தலைப்பு.

அதில் பக்கம் 117-ல் ஒரு முக்கியக் கருத்தை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். "வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் கருத்து கேட்டு, திரட்டப்பட்ட கருத்துக் கணிப்புகளில் 5-ல் 4 பங்கு பெரிய கட்சியின் வெற்றிகளைக் குறைத்து மதிப்பிடுவதே வழமையாகும்".

மேலும் கூறுகிறார்கள்:

கருத்துக் கணிப்புகள் தவறாகி விடுவதற்கு முக்கியக் காரணங்கள்:

1. "சிறிய சாம்பிள் சர்வே அளவுகள். தவறான சாம்பிள் டிசைன், வெல்லும் இடங்களைப் பற்றி தவறான கணிப்பு" - இப்படி பல உண்டு என்கிறார்.

தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறதா?

இவை ஒருபுறமிருக்க, தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை, அதன் சுதந்திரமான செயல் என்ற கருத்தை மாற்றிடும் வகையில் நிகழ்வுகள் அடுக்கடுக்காக நாளும் வந்து கொண்டிருக்கின்றன.

பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் அது மிகவும் சாதகமாக நடந்துகொள்கிறது என்று சாதாரணமானவர்களும்கூட எண்ணும்படி ஆகிவிட்டது!


அதன் சக உறுப்பினர் ஒருவரே, "பிரதமர் மோடி, அமித் ஷா மீது சட்டப்படி விதி மீறல் குற்றச்சாட்டுகளை மறுதலித்தது தவறு; தன்னுடைய முடிவு, அவர்கள் விதி மீறியுள்ளனர் என்பதை ஏனோ பதிவுகூட செய்ய மறுத்திருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். எனவே, அதுபோன்ற கூட்டங்களை அவர் கூட்டினால், நான் அதில் பங்கேற்ற மாட்டேன்"என்று கூறுகிறார்.

மூன்று உறுப்பினர்களும், தலைமைத் தேர்தல் ஆணையர்களும் சம அதிகாரம் பெற்றவர்களே ஆவார்கள்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் 17-ம் தேதி நடக்காமல், 19-ம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, பிரதமருக்கு வசதியாக 17-ம் தேதி காலை 10 மணிவரை பேசிட அனுமதித்தது பாரபட்சமல்லவா என்று அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் கேட்டுள்ளார்கள்.

ஏழு கட்டம் என்று சொல்லி, இவ்வளவு காலம் நீட்டியதே ஆளுங்கட்சியான பாஜகவுக்கு, பிரதமர் மோடி - பல ஊர்களிலும் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை அளிக்க மறைமுக உதவியே என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை தேவை!

தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தினை மாற்றியமைக்க அதன் நம்பகத்தன்மை இழப்பு காரணமாக, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தக்க நேரத்தில் சட்டப் பரிகாரம் தேடிட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடவேண்டியது அவசியம், அவசரம்.

தேர்தலில் நிற்காத பொது அமைப்பு என்பதால், நாம் இதைக் கூறுகிறோம்" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in