

ஜூலை மாதம் தமிழக அரசு தேர்வாணயம் சார்பில் நடைபெற உள்ள குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை பி.டீ.லீ செங்கல்வராய அறக்கட்டளை இலவச தங்குமிடத்துடன் கூடிய, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இது குறித்து பி.டி.லீ. செங்கல்வராய அறக்கட்டளை அமைப்பின் மதிப்புறு இயக்குநர் ஓய்வு ஐஏஎஸ் எஸ்.எஸ். ஜவஹர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுத் தேர்வாணயத்தின் சார்பில் குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளன.
முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் வகையில் பி.டீ.லீ செங்கல்வராய அறக்கட்டளை சார்பில் இலவச தங்கும் வசதியுடன், இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 5-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. அனைத்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலையில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.
3.3.2019- அன்று நடந்த முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த இலவச பயிற்சி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடத்தப்படும்.
வரும் 5--ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை, வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள பி.டி.லீ. செங்கல்வராய பாலிடெக்னிக் வளாகத்தில் இலவச அறிமுக வகுப்பு நடத்தப்படும். அப்போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ். ஜவஹர் தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வ செய்ய உள்ளார்.
ஆதலால், தகுதி உடையவர்கள் வரும் 5-ம் தேதி மாலை 3 மணிக்குள்ளாக முதன்மைத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நகலுடன் பதிவு செய்து அறிமுக வகுப்பில் பங்கேற்கலாம்.
போட்டித் தேர்வுக்கான சிறப்பு பள்ளியின் தொலைபேசி எண்கள் 044-26430029 மற்றும் 8668038347 ஆகிய எண்ணிகளில் பேசி முன்பதிவு செய்து கொள்ளலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.