Published : 24 May 2019 10:01 AM
Last Updated : 24 May 2019 10:01 AM

10 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையை மீண்டும் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் 

மதுரையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 2 மக்களவைத் தேர்தல்களாக திராவிடக் கட்சிகளின் வசமிருந்த மதுரை மீண்டும் தேசியக் கட்சியின் வசமாகியுள்ளது.

அதிமுகவில் மதுரை தங்களுக்குச் சாதகமான வாக்கு வங்கியுள்ள மாவட்டமாக கருதப் பட்டது. இந்த மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதி, 10 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. சட்டமன்றத் தொகுதிகளில் தொடர்ந்து அதிமுக பெரும் வெற்றி பெற்றாலும் மக்களவைத் தொகுதியில் கடந்த முறை மட்டுமே முதல் முறையாக வெற்றிபெற்றது.

தொடர்ந்து மதுரை மக்களவைத்தொகுதி தேசிய கட்சிகளின் ஆதிக்கத்திலேயே இருந்தது. மதுரை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் அதிக பட்சமாக 8 முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. 1998-ம் ஆண்டு சுப்பிரமணியசாமி ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1957-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கே.டி.கே.தங்கமணி வெற்றிபெற்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி 3 முறை வெற்றிபெற்றுள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மோகன் தொடர்ந்து 1999, 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் களில் வெற்றிபெற்றார்.

அதன்பிறகு மார்க்சிஸ்ட் இங்கு வெற்றி பெறவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பின் மதுரையை மார்க்சிஸ்ட் கட்சி கைப்பற்றியுள்ளது.அக்கட்சி சார்பில் இந்த முறை போட்டியிட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் வெற்றிபெற்று முதல் முறையாக எம்பியாகியுள்ளார்.

தொடர்ந்து தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த மதுரை மக்களவைத்தொகுதியில் 2009-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றிபெற்றார். அதன்பிறகு கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரையை அதிமுக முதல் முறையாக கைப்பற்றியது. அதிமுக சார்பில் போட்டியிட்ட கோபால கிருஷ்ணன் வெற்றி பெற்று எம்பியானார்.

தொடர்ந்து கடந்த 2 தேர்தல்களாக திராவிடக் கட்சிகளின் வசமிருந்த மதுரை மக்களவைத் தொகுதி இந்த முறை மார்க்சிஸ்ட் வெற்றிபெற்றதன் மூலம் மீண்டும் தேசியக் கட்சியின் வசமாகியுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x