Published : 27 Sep 2014 08:35 AM
Last Updated : 27 Sep 2014 08:35 AM

தனி விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டார் ஜெயலலிதா: சசிகலாவும் இளவரசியும் உடன் பயணம்

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாவதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக‌ முதல்வர் ஜெயலலிதா காலை 8 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார்.

அவருடன் சசிகலா, இளவரசி, போயஸ் கார்டன் ஊழியர்கள் இருவரும் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள நீதிமன் றத்தில் காலை 11 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகிறார்கள்.

சுதாகரன் ஏற்கெனவே பெங்களூர் வந்து, தனது நண்பரின் பண்ணை வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெங்களூர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ''தனி விமானம் மூலம் பெங்களூர் ஹெச்.ஏ.எல். பகுதி யில் உள்ள பழைய விமான நிலையத்திற்கு வருகிறார். அவரை தமிழக அமைச்சர்களும், கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகளும் வரவேற்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து சாலை வழியாக 35-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வாகனங்களுடன் பரப்பன அக்ரஹாராவிற்கு காலை 10.30 மணி அளவில் வருகிறார்.

ஜெயலலிதா பயணிக்க இருக்கும் சுமார் 30 கி.மீ. தூரமும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்கு வரத்து மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஜெயலலிதாவின் வாகனம் கடக்கும் போது அந்த சுற்றுவட்டாரத்தில் 500 மீட்டர் தூரத்துக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் செயலிழக்கும். இதற்காக பிரத்யேக “ஜாமர்” பயன்படுத்தப்பட உள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சாலை வழியாக செல்ல ஜெயலலிதா விரும்பாவிட்டால் அவர் வான் வழியாக பயணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஹெச்.ஏ.எல்.விமான நிலையத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வரலாம்.

அதற்காக மத்திய சிறைச்சாலை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரத்யேக ஹெலிபேடு உருவாக்கப்பட் டுள்ளது'' என்று போலீஸார் தெரிவித்தனர்.

பெங்களூரில் தங்கவில்லை

பெங்களூர் வரும் ஜெயலலிதா நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கவில்லை. ஏனென்றால் அது பற்றிய எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. பெங்களூரில் தங்க விரும்பினால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பெங்களூர் போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக செல்லும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்காக நேற்று ஹெலிபேடு அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x