காவிரி ஆணையத்தைத் திட்டமிட்டு பிரதமர் மோடி முடக்கி வைத்துள்ளார்: தினகரன் குற்றச்சாட்டு

காவிரி ஆணையத்தைத் திட்டமிட்டு பிரதமர் மோடி முடக்கி வைத்துள்ளார்: தினகரன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

குடிநீர் பஞ்சத்தை சமாளிப்பதற்கும், குறுவை நெல் சாகுபடி பணிகளுக்கும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெறுவதற்கு பழனிசாமி அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "குறுவை நெல் சாகுபடிக்காகவும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகளை பழனிசாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

காவிரியில் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக நீண்ட இழுபறிக்குப் பிறகு மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை முழுமையாக செயல்படுவதைத் தடுத்து வைத்திருக்கிறார்கள்.

அவற்றுக்கு முழு நேர தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிக்காமல் வெவ்வேறு துறைகளில் இருப்பவர்களை, பெயருக்குப் பொறுப்பாளர்களாகப் போட்டிருக்கிறார்கள். இதன்மூலம் அந்த அமைப்புகளை திட்டமிட்டே மோடி அரசு முடக்கி வைத்திருக்கிறது.

2018 ஜூலை மாதத்திற்குப் பிறகு காவிரி ஆணையமோ, ஒழுங்காற்றுக் குழுவோ இதுவரை கூடவே இல்லை. தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட 26 மாவட்டங்கள் விவசாயத்திற்காகவும்,குடிநீருக்காகவும் காவிரி தண்ணீரைத்தான் நம்பி இருக்கின்றன. இப்போது எல்லா இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. கொளுத்தும் வெயிலில் குடிநீருக்காக மக்கள் குடங்களோடு அலைவது மனதைப் பிசைகிறது. மற்றொரு புறம் காவிரி டெல்டாவில் அடுத்த மாதம் குறுவை சாகுபடி பணிகளைத் தொடங்குவதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.

குறைந்தபட்சம் கடந்த டிசம்பரில் இருந்து இம்மாதம் 31-ம் தேதி வரையிலான காலத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 19.5 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல கர்நாடகா உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு அடாவடி செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் எப்போதும் வெறுப்பை உமிழும் மத்திய அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக குதிரை கீழே தள்ளி குழியும் பறித்த கதையாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகத்தைப் பாலைவனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டை மொத்தமாக டெல்லியிடம் அடகு வைத்துவிட்டு, கை கட்டி, வாய் பொத்தி நிற்கும் பழனிசாமி அரசோ காவிரியில் தண்ணீர் பெறுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாக தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் என்று வெட்கமே இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்தியைப் பிரதமராக்குவோம் என்று ஊருக்கு ஊர் முழங்கும் மு.க.ஸ்டாலினும், அதே ராகுல் காந்தியின் ஆதரவோடு கர்நாடகாவில் இருக்கும் அரசிடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

எனவே, இதற்கு மேலும் தாமதப்படுத்தாமல், குடிநீர் பஞ்சத்தைச் சமாளிப்பதற்கும், குறுவை நெல் சாகுபடி பணிகளுக்கும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெறுவதற்கு பழனிசாமி அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in