ரூ.7,800 கோடி பெங்களூர் – சென்னை விரைவு சாலை திட்டம்: தமிழகத்தில் பணிகள் மந்தம்; ஆந்திரம், கர்நாடகத்தில் மும்முரம்

ரூ.7,800 கோடி பெங்களூர் – சென்னை விரைவு சாலை திட்டம்: தமிழகத்தில் பணிகள் மந்தம்; ஆந்திரம், கர்நாடகத்தில் மும்முரம்
Updated on
1 min read

ரூ.7,800 கோடி திட்டச் செலவில் சென்னையிலிருந்து பெங்களூர் வரையில் விரைவுச் சாலை அமைக்கும் பணிகள் தமிழகத்தில் மந்தமாகவும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் மும்முரமாகவும் நடைபெற்று வருகின்றன.

சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையிலான போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக புதிதாக சென்னை - பெங்களூரு ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய தேசிய நெடுஞ்சாலை அதிகார ஆணையம் சார்பில் ரூ.7,800 கோடி செலவில் இந்த 6 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான திட்டப்பணிகளை மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மற்ற சாலைகளைப் போல அல்லாமல், இந்த சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு அமைக்கப்படும். எந்த குறுக்கீடும் இல்லாமல், வாகனங்கள் புறப்படும் இடத்திலிருந்து சேர வேண்டிய இடத்துக்கு நேரடியாக செல்லும் வகையில் இந்த சாலை இருக்கும். எந்த இடத்திலும் சிக்னல் இருக்காது. சுமார் 120 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். சென்னையில் இருந்து பெங்களூருக்கு 2.30 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

பெங்களூரில் இருந்து கோலார், சித்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாக சென்னையை வந்தடையும் இந்த சாலை 262 கி.மீ. தூரம் கொண்டது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 100 கி.மீ. மீட்டர் தூரம் இடம் பெறுகிறது. மீதமுள்ள தொலைவு கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இடம் பெறுகிறது.

இத்திட்டத்துக்கான முழுமையான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் முடிந்து அறிக்கையும் வழங்கப்பட்டது. இதற்காக மொத்தம் 2,600 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் மட்டுமே சுமார் 1,000 ஹெக்டேர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இதற்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் நிலங்களை கையகப்படுத்த இன்னும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகள் மந்தமாகவே நடக்கின்றன.

இது தொடர்பாக மத்திய தேசிய நெடுஞ்சாலை அதிகார ஆணையத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இத்திட்டத்தில் தமிழகத்துக்குத்தான் அதிக பங்கு உள்ளது. அதாவது, மொத்தமுள்ள 262 கி.மீ. தூரத்தில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது. தமிழகத்தில் தேவையான நிலத்தை கையகப்படுத்த கடந்த ஜூன் மாதமே உத்தரவிடப்பட்டது. ஆனால், இன்னமும் இதற்கான வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

இதனால், தமிழகத்தில் பணிகள் மந்தமாகத்தான் நடக்கின்றன. இருப்பினும், விரைவில் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அதே சமயத்தில் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இத்திட்டத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த விரைவு சாலை அமைக்கப்பட்டால், சென்னையிலிருந்து - பெங்களூருக்கு விரைவாக செல்ல முடியும். தற்போதுள்ள 330 கி.மீ. பயண தூரம் 262 கி.மீ. ஆக குறையும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in