ஆம்பூரில் ரயில் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி

ஆம்பூரில் ரயில் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி
Updated on
1 min read

ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூரை அடுத்த கரும்பூரைச் சேர்ந்தவர் சங்கர் (45). இவர் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயிலைப் பிடிக்க தாமதம் ஏற்பட்டதால் சங்கரும் அவரது சகோதரி பானுமதியும் (50) , பேரன் நித்திஷும் (7) அவசர அவசரமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது மங்களூர் எக்ஸ்பிரஸ் காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஜோலார்பேட்டை பொறுப்பு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இறந்த 3 பேரின் சடலங்களைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரயில்வே போலீஸார் தரப்பில் கூறுகையில், ''ரயில்வே மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல், நடைமேடை வழியாகச் செல்லாமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதே விபத்து ஏற்படக் காரணம். எந்த சூழலிலும் மேம்பாலம், நடைமேடையைப் பயணிகள் பயன்படுத்த வேண்டும். ரயில் புறப்பட்டுவிட்டதே என்று அவசரப்பட்டு தண்டவாளத்தைக் கடக்கவேண்டாம்'' என்று அறிவுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in