Published : 16 May 2019 09:12 AM
Last Updated : 16 May 2019 09:12 AM

சிறுதானிய உணவகம் நடத்தும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்!

கோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை உணவு அங்காடி மற்றும் சிறுதானிய உணவகம் நடத்தி வருகிறார் ஜெ.சுப்பிரமணியம்(40). இவர், பி.இ. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தவர்.

கோவைப்புதூரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகேயுள்ள இந்தக் கடையில் நுழைந்தாலே பலவிதமான  மூலிகை மணம் வீசுகிறது.அருகம்புல், நெல்லி கறிவேப்பிலை, வாழைத்தண்டு, கற்றாழை, வல்லாரை சாறு என ஜூஸ் வகைகள், தேங்காய், கம்பு, நிலக்கடலை,  அத்திப்பழம், பாதாம், பேரிட்சை, பீட்ரூட்,  கறிவேப்பிலை கீர் வகைகள், அரசாணிக்காய் மில்க் ஷேக், நேந்திரம் பழ மில்க் ஷேக், கருப்புப் பேரிட்சை மில்க் ஷேக் என ஏராளமான வகைகள் இங்குண்டு.

அதேபோல,  தூதுவளை மூலிகைப் பொடி கசாயம், முடக்கத்தான் சூப், முருங்கைக் கீரை சூப் என பல வகையான சூப்கள், சுக்கு கருப்பட்டி காபி, மூலிகை டீ, சுக்கு தேங்காய் பால், காய்கறிக் கலவை சூப் வகைகள், காய்கறி, பழ சாலட்கள், இயற்கை வண்ண லட்டுகள், சிறுதானிய இனிப்பு மற்றும் முறுக்குகள்,  வடைகள், தினை, சாமை, குதிரைவாலி, வரகு, பனி வரகு ஆகியவற்றில் பிரியாணி வகைகள், களி வகைகள், கீரை சாத வகைகள், கம்பு, சோளம், ராகி, சிகப்பு அரிசி, அவல் தயிர்சாத வகைகள்,  பலவகையான தானியங்களில் இட்லி, தோசை, கிச்சடி வகைகள் என அசத்துகிறார் சுப்பிரமணியம்.

“சின்ன வயசுலேயே எனக்கு இயற்கை விஷயங்களில் ஈடுபாடு அதிகம். அப்பா விவசாயி. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சிட்டு, தனியார் கல்லூரிகளில் வேலையில் இருந்தேன். மக்கள் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்புனு அவதிப்படுவதைப் பார்த்து, என்னதான் தீர்வுனு யோசிக்க ஆரம்பிச்சேன். நிறைய படிச்சேன்.  உணவால்தான் நோய் உண்டாகுது.

ஏழு வருஷத்துக்கு முன்னால,  இயற்கை வாழ்வியல் மையத்தைச் சேர்ந்த மாறன் கொடுத்த பயிற்சியில் கலந்துகொண்டேன். அப்புறம், இந்தக் கடையை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல காலை 5.30 மணியிலிருந்து 8.30 மணி வரைக்கும் ஜூஸ் வகைகள் மட்டும் போட்டுக்கொடுத்தேன். நான் அலுவலகம்போன நேரத்துல மனைவி கடையை கவனிச்சிக்கிட்டாங்க.  நிறைய ஆட்கள் வந்ததால,  காலை 5.30 மணிக்குத்  தொடங்கி இரவு  9.30 மணி வரைக்கும் கடையை  நடத்தறேன்.ஆரம்பத்துல 2 ஜூஸ் மட்டுமே விற்பனை ஆன நிலையில், இப்ப தினமும் 250 பேர் வர்றாங்க.  எங்ககிட்ட சாப்பிட்டவங்க, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்ததாக சொல்றாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கையால  பல வருஷமா பார்த்த வேலைய விட்டுட்டு,  இப்ப முழு நேரமா கடையை கவனிக்க ஆரம்பிச்சிருக்கேன். இவ்வளவு வகையான இயற்கை உணவுகளோடு ஒரு உணவகம் வேறெங்கும் இல்லைனு நினைக்கறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x