Published : 16 May 2019 09:11 AM
Last Updated : 16 May 2019 09:11 AM

பரிதவிக்கும் பழங்குடி மாணவர்கள்: ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதி

ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தொடர்ந்து கல்வி பயில முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள். 9-ம் வகுப்புக்கு மேல் படிக்கப் போவதில்லை என்று பல மாணவர்களும் கூறுவது, அவர்களது வேதனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

“இங்கு யாரும் 9-ம் வகுப்புக்கு மேல் படிக்கப் போவதில்லை. ஏனெனில், எங்கள் குழந்தைகள்  யாருக்கும் ஜாதிச் சான்றிதழ் கிடையாது. அதிகாரிகள் கொடுப்பதும் இல்லை. ஜாதி சலுகை வாங்காமல் படிக்க வசதியும் இல்லை. எனவே, படிப்பைக் கைவிட்டு, கூலி வேலைக்குச் செல்லாமல் வேறென்ன செய்வது”  என்று கேட்கிறார்கள் இக்குழந்தைகளின் பெற்றோர்.

கோவை க.க. சாவடியிலிருந்து வேலந்தா வளம் சாலையில்,  3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வீரப்பனூர். இந்த ஊரை எட்டுவதற்கு முன்னே இடதுபுறம் செல்லும் குறுக்கு சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவு சென்றால் வருவது ரொட்டிக்கவுண்டனூர் முனியப்பன் கோவில்பதி. இங்கு மொத்தம் 56 வீடுகள். ஒருபுறம் குடிசைகள்,  இன்னொரு பக்கம் அரைகுறையாய் சில செங்கல் சுவர் கட்டிடங்கள். “பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டித் தர்றோம்னு சொன்னாங்க. கடன் வாங்கிக் கொடுத்தோம். கல்லு, மண்ணு, சுமந்தோம். கட்டுபடியாகலைனு பாதியில விட்டுட்டுப் போயிட்டாங்க. வருஷக்கணக்குல  அப்படியே கிடக்குது” என்கின்றனர் அப்பகுதியினர்.

சில தெரு விளக்குகள் இருந்தாலும், வீடுகளுக்கு மின்சார வசதி கிடையாது. இன்னமும் அரிக்கேன் விளக்கு, சிம்னி விளக்குதான்.  தண்ணீர்த் தொட்டியில், ஆழ்குழாய்க் கிணற்று நீரை நிரப்பி,  குடிக்கப் பயன்படுத்துகிறார்கள். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்,  பிரதான சாலையிலேயே மேல்நிலைப் பள்ளி  இருக்கிறது. ஆனாலும், இப்பகுதியினரின் குழந்தைகள் 9-ம் வகுப்புக்கு மேல் செல்வதில்லை.

இப்பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன்கள் சக்திவேல், சதீஷ், வேலுசாமி மகன் மதன்குமார் உள்பட  15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், 9-ம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டுள்ளார்கள். அதேபோல, வெவ்வேறு வகுப்புகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் கூட, “இவர்களையும் ஒன்பதாவது வரைக்கும்தான் படிக்க வைப்போம். அதையும் அவர்களிடம் சொல்லியே வளர்க்கிறோம்” என்கிறார்கள்.

அப்பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி கூறும்போது, “நாங்க மலசர் சாதி. அந்தக் காலத்துல காட்டு வேலை பார்த்தோம். ஒரு சமயத்துல, பண்ணைக்காரங்க சில பேரை வெளியே துரத்திவிட்டாங்க. அதுக்காக 40 வருஷத்துக்கு முன்னாடி, அரசாங்கம் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்தாங்க. அந்த இடம் எங்க அப்பா மாரி மலசன் பேர்லதான் வந்துச்சு. அதை அவர் 59 பேருக்கு பிரிச்சுக் கொடுத்தாரு. அவங்க எல்லாம் அப்ப இங்கே குடிசைபோட்டு குடி வந்தாங்க. காலனிக்கு முனியப்பன் கோயில்பதினு பேரு வச்சுட்டு வாழறோம். இப்ப வரைக்கும் பெரிசா வசதிகள் இல்லை.

முக்கியமா,  எங்களுக்கு ஜாதிச் சான்றிதழ்  தரவே மாட்டேங்கிறாங்க. மணியக்காரர், தாசில்தார், எம்.எல்.ஏ., மந்திரினு கேட்டுப் பார்த்துட்டோம். மலசர்ன்னு ஒரு ஜாதியே இல்லைங்கறாங்க. அதுக்கு ஆதாரத்தை கொண்டு வாங்கனு சொல்றாங்க. காடு, காடா திரிஞ்ச நாங்க,  ஆதாரத்தை எங்கிருந்து கொடுக்க முடியும்? எங்க உறவினர்கள் மருதமலை, ஆனைகட்டி, வெள்ளியங்கிரி மலை, ஆனைமலை வரைக்கும் இருக்காங்க. அவங்களை எல்லாம் விசாரிச்சுப் பார்த்து, ஜாதிச் சான்றிதழ் கொடுக்க வேண்டியதுதானே?

இப்ப பசங்க படிக்கிற பள்ளிக்கூடத்துல ஜாதிச் சான்றிதழ் கேட்கிறாங்க. அதுவும் 9-ம் வகுப்பு போயிட்டா நச்சரிக்கிறாங்க. பசங்களை பள்ளிக்கூடத்துக்குள்ளேயே விடறதில்லை. நாங்களும் அதிகாரிகளைப் போய்ப் பார்க்கறோம்.

இந்து மலசரா, இந்திய மலசரா, அப்படி ஒரு சாதியே இல்லைனு அதிகாரிகள் சொல்றாங்க. எத்தனை நாளைக்குத்தான் இதுக்காக நடையா நடக்கிறது. இதனால் பசங்க பள்ளிக்கூடம் போறதில்லை. எந்தக்குழந்தையும் 9-ம் வகுப்புக்கு மேல படிக்கப் போறதேயில்லை”  என்றார்.

வேலுச்சாமி கூறும்போது, “நான்தான் படிக்கலை. என் பையனாவது படிக்கணும்னு ரொம்ப முயற்சி செஞ்சேன். அவன் 9-ம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர்கள் பலமுறை நெருக்கடி கொடுத்தாங்க. ஜாதிச் சான்றிதழ் வாங்கிட்டு வரலைனா, டிசி வாங்கிட்டுப்  போங்கனு சொல்லிட்டாங்க. எவ்வளவோ சொல்லியும் கேட்கலை.  அதனால பையனைக்  கூட்டுட்டு வந்துட்டேன். ஒரு வருஷமா கூலி வேலைக்குப் போகிறான்” என்றார்.

இதேபோல, வசந்தாமணியின் மகன் ஜாதிச் சான்றிதழ் இல்லாததால், பள்ளிக்குச் செல்வதையே நிறுத்திவிட்டார்.  அடுத்த பெண் ரம்யா 6-ம் வகுப்பு படிக்கிறார். இப்போதே, ஜாதிச் சான்றிதழ் கேட்டு நச்சரிக்கிறார்களாம். இப்படி, பலரும் ஜாதிச் சான்றிதழ் இல்லாததால், பள்ளிக்குச்  செல்ல மாட்டேன் என்று  அடம்பிடிக்கிறார்களாம்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மதுக்கரை பகுதி மலைவாழ் மக்கள் சங்க ஒன்றியப் பொறுப்பாளர் சண்முகம் கூறும்போது, “இது வெறும்  56 குடும்பங்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. இவர்களைப்போல மலசர்கள் நிறைய பேர், எட்டிமடை மலைக்கும், கேரளத்தின் சித்தூர் மலைக்கும் இடையில் ஆங்காங்கே தோட்டங்காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிகாலத்தில் வாளையார், பொள்ளாச்சி ரோடு முழுக்க 42 கிலோமீட்டர் தொலைவு வனாந்திரமாகவே இருந்திருக்கிறது. நாகரிக மனிதர்கள் நடமாட்டமில்லாத அக்காலத்தில்,  இப்பகுதியில் மலசர்களே வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக இங்கு பாலார்பதி, புதுப்பதி, சின்னாம்பதி, குமிட்டிபதி, சீங்கம்பதி என்றெல்லாம் செம்மேடு வரை நிறைய பதிகள் என்ற பழங்குடிகள் கிராமங்கள் உள்ளன.

மன்னர்கள் ஆட்சி, ஜமீன்தார் முறை, நிலவுடமையாளர்கள் வந்த பின்பு,  இங்குள்ள பழங்குடிகள் பண்ணை அடிமைகளாக மாற்றப்பட்டனர். அதில் ஒரு பழங்குடி பிரிவாகவே இந்த மலசர்கள் உள்ளனர். மற்ற பழங்குடிகளுக்கு எல்லாம் ஜாதிச் சான்றிதழ் கிடைக்கும் நிலை இருக்கிறது. ஆனால், இவர்கள் பல கிராமங்களில் பரவலாக இருந்ததாலும், படிப்பு இல்லாததாலும் ஜாதிச் சான்றிதழ் கிடைக்கவேயில்லை.

போராட்டம் நடத்துவோம்!

கோவை, மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆழியாறு, வேலந்தாவளம், கொழிஞ்சாம்பாறை, சித்தூர் பகுதிகளில்,  தோட்டங்களில் பண்ணைக் கூலிகளாக சுமார் 50 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்

பான்மையோருக்கு வாக்குரிமை, ரேஷன்கார்டு, ஜாதிச் சான்றிதழ் எதுவுமே இல்லை. இங்கேயிருப்பவர்களை எங்கள்  அமைப்புதான் 40 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைத்து, இந்த இடத்தில் குடி அமர்த்தியது. இவர்களில் 25 பேருக்கு மட்டும் பட்டா உள்ளது. 8 பேருக்குத்தான் ரேஷன்கார்டு உள்ளது. 36 குடும்பங்களுக்கு ஆதார் கார்டு

உள்ளது. எனவே, அதிகாரிகள் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று விசாரணை நடத்தி,  ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். இவர்களின் கல்வியறிவை மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் முடிவுக்குப் பின்னர், மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x