சென்னையில் உள்ள பண்டைய இசைக்கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் உள்ள பண்டைய இசைக்கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னையில் உள்ள பண்டைய இசைக்கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1957-ம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் அரிதான, பழமையான இசைக் கருவிகளின் அருங்காட்சியமான சங்கீத வாத்யாலயாவை முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பழமையான இசைக்கருவிகளின் மாதிரிகளை உருவாக்குவது, அவற்றைப் பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆசியாவிலேயே சென்னையில் மட்டும் தான் இசைக் கருவிகளுக்கான  அருங்காட்சியகம் உள்ளது. பாரம்பரிய இசையின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையம் முயற்சித்து வருவதாக கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பி.டி. ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால், அதுவரை இசைக் கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்றுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in