Last Updated : 03 May, 2019 08:49 AM

 

Published : 03 May 2019 08:49 AM
Last Updated : 03 May 2019 08:49 AM

நடந்தாய் வாழி சிறுவாணி!- கோடையைக் கடந்தும் கோவைக்கு உதவுமா?

கோவை என்றாலே முன்பெல்லாம் மக்கள் நினைவுக்கு வருவது சிறுவாணி தண்ணீர்தான். சர்வதேச அளவில் சுவை மிகுந்த மற்றும் தூய்மையான தண்ணீர் சிறுவாணி நீர்தான். உலக அளவில் சுவையான தண்ணீரில் முன்னிலை வகிப்பது சிறுவாணிதான்.

இந்த அளவுக்குப் பிரபலமான சிறுவாணி தண்ணீரை மக்களுக்கு வழங்கும் சிறுவாணி அணை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்  இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அணைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு வட்டத்தில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் இந்த நதியின் பயணம் தொடங்குகிறது. இது பவானி ஆற்றின் துணை நதியாகும்.

கோவை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக கோவை நகராட்சி முயற்சியால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்  சிறுவாணி குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது. இதையொட்டி 1929-ல் சிறிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. எனினும், வளர்ந்து வரும் கோவை நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில் 1969 முதல்  தமிழக அரசும், கேரள அரசும் ஆய்வுகள் நடத்தி, 1973-ல் புதிய அணையைக் கட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கேரள அரசின் கட்டுப்பாட்டில்...

இதன்படி, கோவை நகரில் வீடு, சமூக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்குத் தேவையான நீரைத் தேக்க கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி,  பராமரிப்புக்காக அதை தமிழகத்திடம்  ஒப்படைத்தது. இந்த அணை இருப்பது கேரள மாநிலத்தில்தான். அணையைப் பராமரிப்பதும் கேரள அரசுதான். எனினும், கோவைக்கு தண்ணீர் வழங்குவதால், தமிழக அதிகாரிகளும் அணையின் பராமரிப்புப் பணிகளில் பங்கேற்கின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழக-கேரள எல்லையோர வனப் பகுதியில் உள்ள சிறுவாணி அணைதான் தற்போது கோவை மாவட்டத்தின் முக்கியமான நீராதாரமாகும். இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில்,  650 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். இதிலிருந்து கோவையின்  குடிநீர் விநியோகத்துக்காக தினமும் அதிகபட்சமாக  110 மில்லியன் லிட்டர் தண்ணீர் வரை எடுக்க முடியும். எனினும், நீர் இருப்பைப் பொறுத்து 40 முதல் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும், வழியோரமுள்ள 22 கிராமப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், சாடிவயலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பின்னர் மேற்கண்ட  பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மன்னார்காடு வட்டத்தில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில்தான் சிறுவாணி நதியின் பயணம் தொடங்குகிறது.  கோடைக்காலம், தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் சிறுவாணி அணை மற்றும் அடிவார நீர்ப்பிடிப்புப்  பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்தாலும், தென்மேற்குப்  பருவமழைக் காலத்தில்தான் சிறுவாணி அணைக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்கிறது.

மீண்டும் நிரம்பிய அணை!

தொடர் பருவமழை காரணமாக கடந்த 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், 2018-ல்தான் சிறுவாணி அணை 3  முறைக்கு மேல் நிரம்பியது. சிறுவாணி அணை நிரம்பினால் அதன்  உபரி நீர் பவானி ஆற்றில் கலந்து, பில்லூர் அணைக்குச் செல்கிறது. வழக்கம்போல  நடப்பாண்டும் கோடைகாலத்தில் சில நாட்கள் சிறுவாணி அணை மற்றும் அடிவார நீர்ப்பிடிப்புப்  பகுதிகளில் மழை பெய்தது. ஆனால், இந்த மழை தொடர்ந்து பெய்யவில்லை. கோடையில் சில நாட்கள் அதிக  அளவுக்கு மழை பெய்தாலும், பெரும்பாலான நாட்கள் மிகக் குறைந்த அளவிலேயே பெய்தது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது அணைப் பகுதியில் கோடை மழை வெகுவாகக் குறைந்துவிட்டது. கோடை

மழை கைகொடுக்காவிட்டாலும்கூட, அடுத்து வரும் தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மழை தீவிரமடைந்து, சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அப்போதுதான், கோவை மக்களுக்கு தடையின்றிக் குடிநீர் வழங்க இயலும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

பருவமழை கை  கொடுக்கும்!

மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சிறுவாணி அணையில் தற்போதைய கோடைகாலத்தில் சில நாட்கள் மழை பெய்தது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் மளமளவெனக் குறைந்து வருகிறது.

அணையின் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதால், தற்போது 54 மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவுக்குக் கீழே தண்ணீர் மட்டம் சென்றுவிட்டதால், அணையின் நீர்புகு கிணற்றில், மூன்றாவது குழாயில் இருந்துதான்  தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போது அணையில் உள்ள நீர்இருப்பு, இம்மாத இறுதி வரை கைகொடுக்கும். அடுத்த மாதம் தென்மேற்குப் பருவமழைக்காலம் தொடங்க உள்ளதால்,

சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் பெறுவதில் எந்த இடையூறும் ஏற்படாது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x