

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்வாகியுள்ள ஹெச்.வசந்தகுமார் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார். இதன்மூலம் திமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆகக் குறைகிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 6,27,235 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணனுக்கு 3,67,302 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வசந்தகுமார் ஏற்கெனவே நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஹெச்.வசந்தகுமார் இன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வது என்றும், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மூலமும், திமுக தலைவர் ஸ்டாலின் மூலமும் தெரிவிக்க விரும்புகிறேன்.
சட்டரீதியாகப் பார்த்தால் 14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நான் நாளை ராஜினாமா செய்ய உள்ளேன். சபாநாயகரைச் சந்திக்க முடியுமா என்று மட்டும் பார்க்க வேண்டும். அவரைப் பார்த்துவிட்டால் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு டெல்லிக்குச் செல்வேன்'' என்றார் வசந்தகுமார்.
இதன்மூலம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். இடைத்தேர்தல் தேதி அறிவிப்பைப் பொறுத்தே அங்கு திமுக போட்டியிடுமா அல்லது காங்கிரஸ் போட்டியிடுமா என்பது தெரியவரும்.
தமிழக சட்டப்பேரவைக்கு திமுக சார்பில் ஏற்கெனவே 88 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரைத் தவிர 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ஒரு எம்.எல்.ஏ உள்ளார். தற்போது இடைத்தேர்தலில் திமுக சார்பில் 13 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் திமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக உள்ளது.