Published : 28 Sep 2014 05:35 PM
Last Updated : 28 Sep 2014 05:35 PM

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்பு

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பதவியேற்கிறார். முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் தானாகவே பறி போனது. முதல்வர் பதவி காலியானதால், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி இழந்தது.

இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.20 மணிக்கு தொடங்கியது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டு மின்றி, வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மூத்த தலைவர்கள், தேமுதிக அதிருப்தி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் டிஜிபி நடராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பெங்களூரில் இருந்து ஜெயலலிதா கொடுத்தனுப்பிய ஒரு கடிதத்தை கூட்டத்தில் படித்துக் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல் வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மாலை 4.30 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச் சாமி உள்ளிட்டோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். 6 மணி வரை அங்கு ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் ராஜ்பவனுக்கு புறப்பட்டனர்.

ராஜ்பவனில் ஆளுநர் கே.ரோசய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவையும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் அளித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று பகல் 1 மணிக்கு நடக்கிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார். அதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வ ராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற் கிறார்.

பேரவைத் தலைவர்

சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா மனோகரன் ஆகியோர் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பர் என்று பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x