Published : 30 May 2019 01:19 PM
Last Updated : 30 May 2019 01:19 PM

குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி  மன்னர் மன்னன் சஸ்பெண்ட்: பணி ஓய்வுக்கு முன் நாளில் நடவடிக்கை

குட்கா ஊழல்வழக்கில் சம்பந்தப்பட்டு தற்போது ரயில்வே டிஎஸ்பியாக பதவி வகிக்கும் மன்னர் மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாளை பணி ஓய்வுபெறும் நிலையில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குட்கா முறைகேடு நடந்த காலகட்டத்தில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையராக இருந்தவர் மன்னர் மன்னன்.

குட்கா ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதும் இவரது வீட்டிலும், செங்குன்றம் காவல் ஆய்வாளர் சம்பத் குமார் வீட்டிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ ரெய்டு நடத்தியது. சம்மன் அனுப்பி விசாரணைக்கும் அழைத்தது.

மன்னர் மன்னன் தற்போது மதுரை ரயில்வே டி.எஸ்.பி.யாக பதவி வகிக்கிறார். குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ முதல்முறையாக காவல்துறை அதிகாரிகளை விசாரித்தது இவர்கள் இருவரைத்தான்.அதன் பின்னரே உயர் அதிகாரிகளை விசாரித்தது.

மன்னர் மன்னன் புழல் உதவி ஆணையராக பதவி வகித்ததால் இவருக்கு தெரியாமல் குட்கா கிடங்கு 2 ஆண்டுகள் செயல்பட்டது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் நாளை மன்னர் மன்னன் பணி ஓய்வு பெறவிருந்தார்.

அவரது பணி ஓய்வுக்கு ஒரு நாள் முன்னர் அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதில் இரண்டு காரணங்களுக்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒன்று குட்கா முறைகேடு விவகாரம், இரண்டு மன்னர் மன்னன் காவல் பணியில் இருந்த நேரத்தில் கொலை வழக்கு ஒன்றை சரியாக விசாரணை நடத்தாமல் விட்டது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் இவருக்கு வரவேண்டிய பணப்பயன்கள் எதுவும் வராது. மன்னர் மன்னர் காவல் துறையில் ஆயுதப்படையில் பிரிவு 2 அதிகாரியாக இருந்தவர். போக்குவரத்து காவல்துறையில் எஸ்.ஐ ஆக இருந்த இவர் பதவி உயர்வு மூலம் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றினார். பின்னர் பிரிவு  ஒன்று அதிகாரியாக சட்டம் ஒழுங்குப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x