தேனியில் அதிமுகவுக்கு ஆறுதல் வெற்றி; கூட்டணி கட்சிகள் படுதோல்வி: 38 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி; சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுக அதிக இடங்களை பிடித்தது

தேனியில் அதிமுகவுக்கு ஆறுதல் வெற்றி; கூட்டணி கட்சிகள் படுதோல்வி: 38 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி; சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுக அதிக இடங்களை பிடித்தது
Updated on
2 min read

தமிழகம், புதுச்சேரியில் 38 மக்கள வைத் தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுகவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி உட் பட 23 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் திமுக அதிக இடங்களில் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா ஆகியவை படுதோல்வி அடைந்துள்ளன.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 22 சட்டப் பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 45 மையங்களில் நேற்று எண்ணப்பட்டன.

காலை 8 மணிக்கு வாக்கு எண் ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று முடிவுகள் காலை 8.30 மணி அளவில் வெளியானது. முதலில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணியே முன்னிலையில் இருந்தது. தேனியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். தருமபுரி, சிதம்பரம் தொகுதிகளில் மாலை வரை அதிமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. ஆனால், மாலை 6 மணிக் குப் பிறகு இந்த தொகுதிகளில் நிலைமை மாறி, திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. சிதம்பரம் தொகுதியில் இரவு 11 மணி வரை விசிக வேட்பாளர் திருமாவளவனும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறிமாறி முன்னிலையில் இருந்தனர். ஆனால், இறுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டி யிட்ட திமுக வேட்பாளர் பி.வேலுசாமி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 5 லட் சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் கே.ஜோதிமுத்துவை தோற் கடித்தார். திருச்சி தொகுதியில் காங் கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவ னைவிட 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

திமுக வேட்பாளர்கள் கனிமொழி (தூத்துக்குடி), எஸ்.எஸ்.பழநிமாணிக் கம் (தஞ்சாவூர்), தயாநிதி மாறன் (மத்திய சென்னை), கலாநிதி வீரா சாமி (வட சென்னை), கவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), சி.என்.அண்ணா துரை (திருவண்ணாமலை), காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஜோதிமணி (கரூர்), திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், ஆகியோர் தலா 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

திமுக வேட்பாளர்கள் எஸ்.ஜெகத் ரட்சகன் (அரக்கோணம்), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), ஜி.செல்வம் (காஞ்சிபுரம்), எஸ்.ராம லிங்கம் (மயிலாடுதுறை), ஆ.ராசா (நீலகிரி), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும் புதூர்), காங்கிரஸ் வேட்பாளர்கள் கே.ஜெயக்குமார் (திருவள்ளூர்), கார்த்தி சிதம்பரம் (கிவகங்கை), எச்.வசந்தகுமார் (கன்னியாகுமரி), எம்.கே.விஷ்ணுபிரசாத் (ஆரணி) திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் ஏ.கணேசமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் (நாமக்கல்) ஆகி யோர் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

திமுக கூட்டணியில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தேனி தொகுதியில் மட்டும் தோல்வி அடைந்தது. அங்கு காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரிடம் தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் தவிர மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் (கோவை, மதுரை), இந்திய கம்யூனிஸ்ட் (நாகை, திருப்பூர்), விசிக (சிதம்பரம், விழுப்புரம்), மதிமுக (ஈரோடு), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ராமநாதபுரம்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (நாமக்கல்), இந்திய ஜனநாயகக் கட்சி (பெரம்பலூர்) என திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதேநேரத்தில், அதிமுக கூட்டணி யில் போட்டியிட்ட பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளன. கடந்த 2014-ல் அதிமுக, திமுகவுக்கு எதிராக தேமுதிக, பாமக, மதிமுகவுடன் தனி அணி அமைத்த பாஜக, கன்னியாகுமரி தொகுதியில் வென்றது. தருமபுரியில் பாமக வெற்றி பெற்றது. ஆனால், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட பாஜகவும் 7 இடங்களில் போட்டியிட்ட பாமக வும் அனைத்திலும் தோல்வி அடைந் துள்ளன.

புதுச்சேரி

புதுச்சேரி மக்களவைத் தொகுதி யிலும் திமுக கூட்டணியில் போட்டி யிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கம் அமோக வெற்றி பெற்றுள் ளார். அதேபோல புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

சட்டப்பேரவை இடைத்தேர்தல்

தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர் தலிலும் திமுகவே அதிக இடங்களில் வென்றுள்ளது. அந்தக் கட்சி 13 இடங் களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 2011, 2016 சட்டப் பேரவைத் தேர்தல்கள், 2014 மக்கள வைத் தேர்தல் என தொடர்ந்து தோல்வி யைச் சந்தித்த திமுக, இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத் தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக 33.5 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 12.4, மார்க்சிஸ்ட் 2.6, இந்திய கம்யூனிஸ்ட் 2.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. அதிமுக 18.46 சதவீத வாக்குகளை பெற்று பெரும் சரிவை சந்தித்துள்ளது. பாமக 5.42, பாஜக 3.4, தேமுதிக 2.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.

கடந்த 2004 மக்களவைத் தேர்த லில் திமுக, காங்கிரஸ், பாமக, மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதி களிலும் வென்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in