

தொழில்நுட்ப காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் சேவை நேற்று அதிகாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக தடைபட்டது. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லில் தொலைபேசி சேவைகள் நேற்று அதிகாலை முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மாநிலம் முழுவதும் தடைபட்டது. தொலைபேசி அழைப்புகள், எஸ்எம்எஸ், 2ஜி, 3ஜி என எந்த சேவையும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சுதா என்பவர் கூறும்போது, ''டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தேன். என்னை அழைக்க வந்திருந்த என் தந்தையின் பிஎஸ்என்எல் செல்போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. பொது தொலைபேசியில் இருந்து அழைத்தும், எஸ்எம்எஸ் செய்தும் எந்த தகவலும் பரிமாறிக் கொள்ள முடியவில்லை. ரயில் நிலையத்தில் சுமார் அரைமணி நேரம் சுற்றித் திரிந்துதான் அவரை பார்க்க முடிந்தது'' என்றார்.
''உடல் நலக்குறைவு காரணமாக அலுவலகம் போக முடியவில்லை. விடுப்பு தெரிவிக்க உரிய அதிகாரியை தொடர்புகொள்ள முடியாமல் சிரமத்திற்குள்ளானேன்'' என்றார் அலுவலக ஊழியரான ரகு.
''என் குழந்தையின் பள்ளி வேன் வருவதற்கு காலதாமதம் ஆனது. பள்ளியில் காலை 7.30-க்கு இருக்க வேண்டும். ஆனால் 7.15 மணி வரை பள்ளி வேன் வரவில்லை. என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள போன் செய்தால், தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் ஏற்பட்டது'' என லாவண்யா கூறினார்.
இது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பிஎஸ்என்எல் சர்வரில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பழைய சர்வரில் இருந்து புதிய சர்வருக்கு மாற்றம் செய்யப்பட்டது. பொதுவாக அதிகாலை நேரங்களில்தான் இந்த வேலைகள் நடைபெறும். ஒரு சர்வரில் இருந்து வேறு சர்வருக்கு மாற்றம் செய்யப்பட்ட இடைவேளையின்போது பிஎஸ்என்எல்-லின் அனைத்து சேவைகளும் தடைசெய்யப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 2 மணிநேரத்துக்கு மேல் பிஎஸ்என்எல் சேவைகள் முடங்கியிருந்தன. காலை 10 மணிக்குள்ளாகவே அனைத்து சேவைகளும் சரி செய்யப்பட்டுவிட்டன'' என்றார்.