

கதிர்வீச்சு, ரசாயனம், உயிரியல் தொழில்நுட்பங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அதைக் கண்டுபிடித்து எச்சரிக்கும் நவீன கருவி, போலீஸ் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகள் மூலம் பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் தீவிரவாதிகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆந்த்ராக்ஸ்’ என்ற ரசாயனப் பொடி மூலம் தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டது. இதேபோன்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதியியல் ரசாயனப் பொருட்கள், வைரஸ்களைப் பரப்பி நோயை உண்டாக்கும் உயிரி தொழில்நுட்பங்கள், கதிர்வீச்சு மூலம் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துதல் போன்றவை மூலமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் உடனடியாக வெளியே தெரிந்துவிடும். அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசும், பொதுமக்களும் எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் கதிர்வீச்சு, ரசாயனம், உயிரியல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் உடனடியாக கண்டுபிடிக்கவும் முடியாது. பெரிய அளவில் பாதிப்புகளும் ஏற்படும்.
ஆகவே, மேற்சொன்ன தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்பே அல்லது தாக்குதல் நடந்த உடனே அதைக் கண்டுபிடிக்கும் வகையில் MOBILE RADIATION DETECTION SYSTEM (MRDS) என்ற நவீன கருவியை பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆபத்தை ஏற்படுத்தும் கதிர்வீச்சு, ரசாயனம் போன்றவற்றை யாராவது வைத்திருந்தால் அதை உடனடியாக கண்டுபிடித்து தெரிவிக்கும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கருவி சென்னை மாநகர காவல் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
ரோந்து வாகனம் செல்லும் இடங்களைச் சுற்றி குறிப்பிட்ட மீட்டருக்குள் கதிர்வீச்சு, ரசாயனம் போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருந்தால் இந்தக் கருவியில் அலாரம் அடித்து, சிவப்பு விளக்கு ஒளிரத் தொடங்கும்.
மேலும், இந்தக் கருவியில் இருந்து பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும் நேரடியாக தகவல் அனுப்பப்படும். உடனே, அங்கிருந்து மீட்புக் குழுவினர் பாதிப்புக்குள்ளான இடத்துக்கு வந்து விடுவார்கள்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சென்னையில் உள்ள 350 காவல் ரோந்து வாகனங்களில் முதல்கட்டமாக 60 வாகனங்களில் எம்.ஆர்.டி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் சென்னையை தற்போது சுற்றி வந்து கொண்டுள்ளன.
இதற்காக எம்.ஆர்.டி.எஸ் கருவியைக் கையாளுவது குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட போலீஸாருக்கு சிறப்புப் பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கெனவே இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பற்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கதிரியக்க மீட்புப் பணிகளுக்காக பயிற்சி பெற்ற ஒரு குழுவை சென்னையில் நிரந்தரமாகப் பணிபுரியவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்று தெரிவித்தார்.
தமிழக காவல்துறை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒவ்வொரு துறையிலும் நவீன வரவுகளை தன்னுள்ளே சுவீகரித்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. சென்னை காவல் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் அடுத்தகட்டப் பாதுகாப்பு நோக்கி நகர்கிறது. பொதுமக்கள் பாதுகாப்புடன் வாழவும் வழிசெய்யப்பட்டுள்ளது.