Published : 06 May 2019 03:13 PM
Last Updated : 06 May 2019 03:13 PM

நீட் தேர்வு பரிதாபங்கள்; உதவி செய்த உயர்ந்த உள்ளங்கள்: காவலர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டு

நீட் தேர்வின்போது திடீர் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு உதவிய நல்ல உள்ளங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் மாணவரளுக்கு உதவிய காவலர்கள். ஆட்டோ ஓட்டுநரைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

படித்து நல்ல மார்க் எடுத்து மருத்துவம் படிப்பேன் என்று முன்பு சொல்வார்கள். ஆனால் படித்து நல்ல மார்க் எடுத்தாலும் 1 லட்சம் 1.5 லட்சம் கட்டி பயிற்சி எடுத்து நீட் தேர்வு எழுதி பின்னர் பாஸாகி மருத்துவம் பயில்வேன் என்பது இந்தக் காலம்.

தேர்வு எழுதும் பதற்றத்தில் சாப்பிடாமல் 6 மணி நேரத்திற்குமேல் இருந்து தேர்வு எழுதி சோர்வுடன் ஊர் திரும்பிய கமுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

இதேபோன்று சிறிய தவறுகளைச் செய்த மாணவர்களை பெருங்குற்றம்போல் தேர்வெழுதவிடாமல் செய்ததும் நடந்தது. கோவை மையத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வந்த மாணவரிடம் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ இல்லை என திருப்பி அனுப்பியுள்ளனர்.

அவர் வெளியே வந்து தாயாரைத் தேட தாயாரும் இல்லாத நிலையில் பணமில்லாமல் கையைப் பிசைந்துகொண்டு நின்றார். அவரிடம் என்ன விஷயம் என அங்கு வந்த காவலர் சரவணகுமார் கேட்க, மாணவர் கலங்கியபபடி நடந்ததைக் கூற, ''முதலில் போய் போட்டோ எடுத்துவிட்டு வா'' என தன்னிடம் இருந்த 40 ரூபாயை மாணவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார் சரவணகுமார்.

போட்டோ எடுத்துவிட்டு ஓடோடி வந்த மாணவர் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவைக் கொடுத்து தேர்வெழுதியுள்ளார். 40 ரூபாய் சிறிய உதவி என்றாலும், அது இல்லாவிட்டால் மாணவரின் ஓராண்டு கனவு பாதிக்கப்பட்டிருக்கும்.

இதேபோன்று மைல்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் ஆதார் அட்டை எடுத்து வரவில்லை என தேர்வு எழுத அனுமதிக்க மறுக்க 20 கி.மீ. தூரமுள்ள வீட்டுக்கு எப்படியோ தட்டுத்தடுமாறி பேருந்தில் சென்று சேர்ந்த மாணவர் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு திரும்ப பேருந்து நிலையத்தில் பரிதவிப்போடு நிற்க அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் விவரம் கேட்டு அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வேகவேகமாக மையத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால், அவர் தேர்வெழுத முடியாமல் போனது. காரணம், வெளியில் ஹால் டிக்கெட்டுடன் இருந்த தாயார் அந்நேரம் அங்கு இல்லாததால் தாயைக் கண்டுபிடித்து ஹால் டிக்கெட்டை வாங்க முடியாத நிலையில் மாணவரின் நீட் கனவு தகர்ந்தது. ஆட்டோ ஓட்டுநர்  உயிரைப் பணயம் வைத்து அழைத்து வந்தும் உபயோகமில்லாமல் போனது.

அயனாவரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது தாயாருடன் பதைபதைப்புடன் சாலையில் செல்ல அதைக் கண்டு சந்தேகமடைந்த கணபதி என்கிற தலைமைக் காவலர் ஒருவர் அவர்களிடம் என்ன விவரம் என கேட்டுள்ளார். அவர்கள் நீட் தேர்வு எழுத வந்ததாகவும், ஆனால் நீட் தேர்வுக்குச் செல்ல நேரமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

''அப்படியா ஒன்றும் பிரச்சினை இல்லை. என் வாகனத்தில் ஏறிக்கொள்ளம்மா, நான் கொண்டுபோய் விட்டு விடுகிறேன்'' என காவலர் கணபதி சொல்ல, உடனடியாக அந்த மாணவி வாகனத்தில் ஏறிக்கொள்ள, கணபதி வேக வேகமாகச் சென்று நீட் தேர்வு மையத்தில் இறக்கி விட்டார். மாணவியை உள்ளே அனுமதிக்கலாமா? என அங்குள்ள காவலர்கள் யோசிக்க, உடனடியாக அங்கும் கணபதி தலையிட்டு, ''முதலில் உள்ளே அனுப்புங்க சார்'' என அனுப்பி வைத்தார்.

செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்க, ''அவர்கள் பேருந்தை விட்டு இறங்கி பரபரப்புடன் செல்வதைப் பார்த்தபோது ஏதோ மனதில் பட்டது. அருகில் சென்று கேட்டேன். தேர்வுக்கு நேரமாகிவிட்டதால் பதைபதைப்புடன் செல்வதாகச் சொன்னார்கள். உடனடியாக என் இருசக்கர வாகனத்தில் ஏற்றிவந்து இறக்கிவிட்டேன்.

இதெல்லாம் சிறிய உதவிதானே சார். நம்ம வீட்டில் மகள் பாதிக்கப்பட்டால் செய்யமாட்டோமா?'' என தலைமைக் காவலர் கணபதி தெரிவித்தார். அவர் முகத்தில் ஒரு மாணவியின் தேர்வுக்கு உதவினோம் என்கிற திருப்தியைக் காண முடிந்தது.

நீட் தேர்வின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், மாணவர்கள் தவித்து நின்ற போது உதவிய  உயர்ந்த உள்ளங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அவர்களுக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x