

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் நாளை மறுநாள் பூரி அருகே கரையை கடக்கும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் தற்போது ஒடிசா, கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாளை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:
அதி தீவிர புயலாக மாறிய ஃபானி புயல், சென்னையில் இருந்து 420 கிமீ தொலைவில் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசும். இந்த புயல் நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஃபானி புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 4-ம் தேதிக்குப் பிறகு கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.