Published : 18 May 2019 07:44 PM
Last Updated : 18 May 2019 07:44 PM

நிலத்தடி நீர் விவகாரம்; மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம்  அவமதிப்பு வழக்கு:  மே 20-க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும்,  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் மே 20-க்குள் பதிலளிக்க வேண்டும் என அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு  நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள்  நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து  தமிழக அரசு கடந்த 2014-ல் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து 75 தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘வணிக ரீதியில் தேசத்தின் சொத்தான நிலத்தடி நீரைத்  திருடுபவர்கள் மீது  திருட்டு வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அளவுக்கு மீறி தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க ‘ப்ளோ மீட்டர்’ கருவிகளைப்  பொருத்தி அவற்றை முறையாகப் பரிசோதிக்க வேண்டும்.

தண்ணீரைத் தேவையின்றி வீணடிப்பவர்கள் மீது மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 425-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களின் உரிமங்களை  ரத்து செய்ய வேண்டும். மேலும் ப்ளோ மீட்டர் பொருத்தப்பட்ட பிறகும், வரையறுக்கப்பட்ட அளவைத்தாண்டி தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிரத்யேக  கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும், என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருவதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளார்.

நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தலைநகரமான சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதிகாரிகள் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. தண்ணீர் பஞ்சம் ஒருபக்கம் என்றால் தண்ணீர் திருட்டும் மறுபக்கம் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே இதுதொடர்பாக தமிழக பொதுப்பணித்துறைச் செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரிய மண்டல இயக்குநர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆகியோர் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து வரும் மே 20-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x